யும் கவனித்தான். அவர்கள் பார்வை அவன் பக்கம் திரும்பவில்லை. சேரன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான். விஜயின் டிரைவர் வேகமாகப் போயிருக்கலாம். ஆனாலும் அப்படிப் போகவில்லை. ஓரளவு நிதானமாகச் சென்றான். கொஞ்ச நேரத்தில் அம்பாசிடர் பின்னே வருவது தெரிந்தது. ‘சேரன் பஸ்ஸைப் பிடித்துச் செல்லும் வரை இந்த அம்பாசிடரில் இருப்பவர்களைக் கொஞ்சம் போக்குக் காட்டி அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று நினைத்தான். அதனால் காரைத் திருப்பி மார்க்கெட்டின் மறுபுறம் இருந்த சாலையில் செலுத்தினான். அம்பாசிடரும் அப்படியே சென்றது. அதைக் கண்டு மகிழ்ந்த டிரைவர் மீண்டும் சேரிங் கிராசைக் கடந்து வலப்பக்கம் திரும்பிப் போனான். அம்பாசிடரும் அப்படியே சென்றது. இப்படி அரை மணிநேரம் போக்குக் காட்டிய பிறகு விஜயின் பங்களாவுக்குச் சென்றான், டிரைவர். அப்போதும் அம்பாசிடர் அதைப் பின் தொடர்ந்ததைக் கவனித்தான். காரை, போர்டிகோவில் நிறுத்திவிட்டு வெளியே வந்து டிரைவர் பார்த்தபோது, அம்பாசிடர், வந்த வழியே திரும்பிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். “சேரனைப் பிடிக்கவா பார்த்தீங்க ! அவன் இந்நேரம் குன்னூரைக் கடந்திருப்பான், தெரியுமா?” டிரைவர் மனத்திலே நினைத்த போதே அவன் முகத்திலே ஒரு வெற்றிப் புன்னகை படர்ந்தது. அந்த டிரைவருக்கு, அம்பாசிடரில் வந்தவர்கள் துப்புத் துலக்குவதில் மிக திறமையானவர்கள் என்பது தெரியாது. |