அம்பாசிடரை வேறொரு குறுக்குத் தெருவில் நிறுத்தி விட்டு, இருவரும் விஜய் பங்களாவை நோக்கி வந்தனர். அந்தப் பங்களாவுக்குள் நுழையவில்லை. அதற்கு முன்னே இருந்த பங்களாவை நோட்டம் விட்டார்கள். அந்தப் பங்களாவின் முன்புறம் செடிகளுக்கு பூவாளியால் ஒரு கிழவன் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். ஜாக்கி, “தாத்தா” என்று சொந்தப் பேரனைப் போலத் தேனொழுக அழைத்தான். கிழவன் தன் வேலையை நிறுத்தி விட்டு, குரல் வந்த திசையில் பார்த்தான். அதற்குள் ஜாக்கியும், பாபுவும் உரிமையோடு பங்களாவுக்குள் நுழைந்து, கிழவன் அருகே வந்தனர். பங்களாவின் தோட்டம் பிரமாதம் என்றும், கிழவனின் தோட்டக்கலை அறிவும், கடுமையான உழைப்பும் செடிகளைப் பார்த்தாலே தெரிகின்றன என்றும் கொஞ்சநேரம் புகழ்ந்தார்கள். பிறகு மெதுவாக அந்த வீட்டைப் பற்றி விசாரித்தான் ஜாக்கி. விஜய் பற்றியும் அவன் தந்தை பற்றியும், கிழவன் சொன்னான். அந்த வீட்டில் விஜயின் விருந்தாளியாக ஒரு பையன் வந்திருக்கிறான் என்றும் அவனைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினான். ஜாக்கி ஒரு பத்து ரூபாயைக் கிழவனின் கையில் திணித்து, பக்கத்துப் பங்களாவில் ரெண்டு பையன்களும் அப்போது இருக்கிறார்களா? - இருவருடைய கோயமுத்தூர் முகவரிகள் என்ன-என்னும் விவரத்தைப் பெற்றுத் தருமாறு வேண்டினான். கிழவன் அடுத்த பங்களாவுக்குள் நுழைந்தான். சமையற்காரனிடம் பேசினான். பத்து நிமிஷத்தில் திரும்பி வந்தான். |