வீட்டில் விஜய் மட்டும் இருக்கிறான். இன்னொரு பையன் சேரன், அவசரமாகக் கோயமுத்தூருக்குப் போய் விட்டான் - என்ற தகவலைக் கொடுத்து, விஜயின் கோவை முகவரியையும் கொடுத்தான் தோட்டக்காரன். சேரனின் முகவரி சமையற்காரனுக்குத் தெரியாதாம். பாபுவும் ஜாக்கியும் கிழவனுக்கு நன்றி தெரிவித்து விட்டுப் புறப்பட்டனர். அந்தப் பங்களாவை விட்டுப் புறப்பட்டார்களே தவிர, அந்தச் சாலையை விட்டுப் புறப்படவில்லை. வீட்டில் இருக்கும் பையனைப் பார்த்து, அவன் தாங்கள் தேடுகிற பையன்தானா என்று அறிய விரும்பினார்கள். சுமார் அரை மணி நேரம் அந்தப் பங்களாவுக்கு அருகிலேயே திரிந்தபோது, ஒரு முறை விஜய் வெளியே வந்ததைப் பார்த்தான், ஜாக்கி, உடனே தான்தேடுகிறவன் அவன் அல்ல - கோவைக்குப் போய் விட்டதாகக் கூறிய சேரனே தங்களுக்குத் தேவையானவன் என்பதை உணர்ந்து கொண்டான். அதன் பின்பு அவர்கள் இருவரும் அங்கே தாமதிக்கவில்லை, காரிலேயே புறப்பட்டுக் கோவை நகரை அடைந்தார்கள். விஜயின் முகவரியைக் கண்டு பிடிப்பதில், சிரமம் இருக்கவில்லை. விஜயின் வீட்டுக்குப்போனார்கள். பங்களாவுக்குள்ளே ஒரு வாட்ச்மேன் இருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுத்து ஊட்டியில் சேரனைப் பார்த்ததாகக் கூறினார்கள். “நான் போட் கிளப்பில் வேலை செய்கிறவன். சேரனுக்குத் தூரத்து உறவு. அவனுக்கு நான் ஊட்டியிலே இருக்கிறது தெரியாது. என்னைத் திடீர்னு பார்த்து சந்தோஷப்பட்டான். கோவைக்கு வந்தா வீட்டுக்கு வரச் சொல்லி இந்த அட்ரஸ் கொடுத்தான். இன்னிக்கே கோவை வரவேண்டிய வேலை இருந்தது. வந்துட்டேன். சேரனும் இன்னிக்கே திரும்பி வர்றதா சொன்னான். |