சேரன், பின்னாடி அவுட் அவுஸ்லே இருக்கானா?” - ஜாக்கி கேட்டான். “சேரன் வீடு இதில்லே ! நெசவாளர் காலனியிலே இருக்கு. அவன் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இங்கே வந்துட்டுப் போனான். என்னமோ ஒரு மாதிரியா இருந்தான். இங்கிருந்து டாலரையும் எடுத்துக்கிட்டுப் போனான்.” வாட்ச்மேன் சொன்னதும், “டாலரையா !” என்று வியப்போடு கேட்டான், ஜாக்கி. “டாலர்னு ஒரு நாயுங்க.” ஜாக்கி அந்த வாட்ச்மேனிடம் சேரன் வீடு எங்கே இருக்கிறது என்று விசாரித்துக்கொண்டு, தேடிக் கண்டு பிடித்துக் கதவைத் தட்டியபோது மணி பிற்பகல் இரண்டு. கதவு தட்டியதும் உடனே திறக்கப் படவில்லை. மீண்டும் கதவைத் தட்டினார்கள். உள்ளே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சேரனின் தாய் எரிச்சலோடு எழுந்து வெளியே வந்தாள். தாழை நீக்கி, கதவைக் கொஞ்சமாய்த் திறந்து வெளியே பார்த்தாள். ஜாக்கியும் பாபுவும் நின்றிருந்தார்கள். “யாரு நீங்க?” என்று கேட்டாள். இப்போதும் ஜாக்கியே பேசினான். “சேரன் இல்லைங்களா?” “இல்லை ஊட்டிக்குப் போயிருக்கான். ஆமாம் நீங்க யாரு?” |