பக்கம் எண் :

54 

“ஊட்டியிலிருந்து திரும்பிக் கோயமுத்தூருக்கு வந்துட்டானுங்களே!”

“வந்தான். விஜயோடு வந்தானாம். திரும்பவும் ஊட்டிக்குப் போறேன்னு போயிட்டான். ஆமாம் நீங்க யாரு?”

ஜாக்கியும் பாபுவும் திகைத்தார்கள்.

“திரும்ப, ஊட்டிக்கேவா போயிட்டான்? எதுக்கு மறுபடியும் ஊட்டிக்குப் போனான்? எப்போ திரும்பி வர்ரதா சொல்லிட்டுப் போனான்?” ஏமாற்றத்தோடு கேட்டான் ஜாக்கி.

“ஏன் போனான் - எப்போ வருவான்னு தெரியாது. ஆமாம், என்னை இத்தனை கேள்வி கேக்கறீங்களே, நீங்க யாருன்னு ஒரு கேள்விக் கேட்டேன். அதுக்கு பதில் சொல்லலையே!”

ஜாக்கியும் பாபுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நான் ஊட்டியிலே இருக்கிறவன். நேத்து அங்கே அவனைப் பார்த்தேன். கோயமுத்தூருக்கு வந்தா, என்னைப் பாரு. விஜய் வீட்டிலே வேலை வாங்கித் தரேன்னான். அதான் வந்தேன்.”

“அப்படின்னா ஊட்டிக்கே போய் அவனைப் பாருங்க.”

பதில் சொல்லி விட்டு, பட்டென்று கதவை மூடித் தாழிட்டு, விட்ட தூக்கத்தைத் தொடரச் சென்றாள், சேரனின் தாய்.

சேரன் வீட்டின், மூடிய கதவுக்கு முன்னே ஜாக்கியும் பாபுவும் ஒன்றும் புரியாமல் குழப்பத்தோடு நின்றார்கள்.