பக்கம் எண் :

 55

“அவசரமாகக் கோவைக்கு வந்த சேரன், திரும்பவும் ஏன் ஊட்டிக்குப் போனான்? விஜயுடன் வந்தான் என்பது பொய். அதைப் போலவே ஊட்டிக்குத் திரும்பவும் போனான் என்பதும் பொய்யா? ஒரு வேளை... அதை ஊட்டியிலே வைத்துவிட்டு வந்துட்டானோ?”

ஜாக்கி பல வகையாகச் சிந்தித்து மேலும் குழப்பமடைந்தான்.

அவனுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் போலும் !

அந்தத் தெரு வழியே சென்று கொண்டிருந்த, மயில்சாமி சேரனின் வீட்டுக்கு முன்னே நின்றிருந்த இருவரைப் பார்த்ததும், அருகே வந்தான்.

“சேரன் வீட்டுக்கு முன்னே நிக்கிறீங்களே, உள்ளே யாரையாச்சும் பார்க்கணுங்களா? கதவைத் தட்டித் திறக்கச் சொல்லட்டுங்களா? எனக்குச் சேரனின் அம்மாவைத் தெரியும். சேரன் என் நண்பன்” என்று கேட்டான், மயில்சாமி.

“வேண்டாம் தம்பி. நாங்களே, கொஞ்சம் முன்னாடி அம்மாவோடே பேசினோம்” என்று கூறிய ஜாக்கி, தொடர்ந்து, “சேரனை உடனே பார்க்கணும்னு வந்தோம். நாங்க வர்றதுக்குள்ளே அவன் போயிட்டான். அவனைப் பார்க்க முடியலையேன்னு வருத்தத்தோட நிற்கிறோம்” என்றான்.

“இப்போ நீங்க சேரனைப் பார்க்கணுங்களா?”

மயில்சாமி கேட்டதும், கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததைப் போல மகிழ்ந்து, “ஆமாம்” என்று ஜாக்கியும் பாபுவும் ஒரே குரலில் கூறினர்.