பக்கம் எண் :

56 

உண்மையில் சேரன் அப்போது எங்கே இருக்கிறான் என்பது மயில்சாமிக்குத் தெரியும்.

சேரன் பதினொரு மணியளவில் கோயமுத்தூர் வந்து விட்டான். நேரே வீட்டுக்குப் போனான். ‘இப்போது சென்னைக்குப் போக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?’ என்று யோசித்தான். சென்னைக்கு ரயிலில் போகச் சுமார் நாற்பது ரூபாய் வேண்டும் என்று யாரோ எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? ஊட்டியிலேயே விஜயிடம்கேட்டிருக்கலாம்? இங்கே நாற்பது ரூபாய் யாரிடம் கேட்டுப் பெறுவது?

இந்தச் சிந்தனையிலிருந்த போதுதான், தெருவையே அதிரச் செய்யும் பெரும் சப்தத்தோடு ஒரு லாரி சென்றதை, வீட்டுச் சன்னல் வழியே பார்த்தான், சேரன். லாரியின் டிரைவரையும் பார்த்தான். அப்போதுதான் மின்னல் போல ஒரு யோசனை உதித்தது !

லாரி டிரைவர், அவனுடைய வகுப்பு நண்பன் மயில்சாமியின் தந்தை கந்தப்பன். தன் தந்தை சென்னைக்கும், கோவைக்கும் இடையே செல்லும் லாரி ஓட்டுகிறவர் என்று மயில்சாமி கூறியது நினைவுக்கு வந்தது. அடுத்த தெருவில் இருக்கும் மயில்சாமியின் வீட்டுக்குக் கந்தப்பன் லாரியுடன் அடிக்கடி செல்வதையும் பார்த்திருந்தான். ‘மயில்சாமியின் தந்தையோடு லாரியில் சென்னைக்குச் சென்றுவிடலாம்’ என்று முடிவு செய்தான்.

உடனே மயில்சாமி வீட்டுக்குப் போன சேரன், அவனிடம் விஷயத்தைச் சொன்னான். மயில்சாமி தந்தையிடம், சிபாரிசு செய்ய, அவர் ஒப்புக் கொண்டார். “இரண்டு மணிக்குள்ளே செட்டி வீதியில் இருக்கிற எங்க சம்பத் டிரான்ஸ்போர்ட் கம்பெனிக்கு வந்துடு. உன்னை மெட்ராசுக்கு அழைச்சுட்டுப் போறேன்” என்று சொல்லி விட்டார்.