சேரன் மிகுந்த சந்தோஷத்தோடு புறப்பட்டான். தான் சேரனுக்குச் செய்த இந்த உதவியை யாரிடமாவது சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த மயில்சாமி, ஜாக்கியும், பாபுவும் “ஆமாம்” என்று சொல்லிவிட்டு அவனை வெகு ஆர்வத்தோடு பார்த்ததும் பூரித்துப் போனான். அதனால் ‘நாம் ஒரு தவறு செய்கிறோம்’ என்பதை உணராமல், தான் சேரன் சென்னைக்குச் செல்ல உதவியதை விளக்கி, முடிவில் “செட்டி வீதியில், சம்பத் டிரான்ஸ்போர்ட் கம்பெனின்னு ஒண்ணு இருக்கு. அங்கே எங்கப்பா கந்தப்பன் ஓட்டுற லாரி இருக்கும். அதிலே சேரன் இருப்பான். சீக்கிரமாப் போனால் பார்க்கலாம். இல்லே, சேரன் லாரியிலே சென்னைக்குப் போயிடுவான்” என்று சொன்னான். மயில்சாமி சொல்லி முடித்ததும் இருவரும் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, கொஞ்ச தூரத்தில் நிறுத்தியிருந்த தமது அம்பாசிடரை நோக்கி ஓடினார்கள். இருவரும் லாரிக் கம்பெனியைத் தேடிக் கண்டுபிடித்தபோது, “கந்தப்பன் லாரி புறப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு மேலாயிடுச்சு” என்ற செய்தி கிடைத்தது. மீண்டும் ஏமாற்றம் ! என்றாலும், செய்தியைக் கூறிய பாரம் தூக்கும் தொழிலாளியிடம் ஐந்து ரூபாயை நீட்டி, அந்த லாரியில் ஒரு பையனும், ஒரு அழகான நாயும் சென்றதையும், லாரி மேட்டூரில் கொஞ்சம் சாமானை இறக்கி விட்டுச் சென்னை செல்லும் என்பதையும் தெரிந்து கொண்டனர். அதன்பின், அம்பாசிடர் கார், ரேஸில் கலந்துகொண்ட வண்டியாகப் பறந்தது. |