கந்தப்பனின் லாரி, பவானியைக் கடந்து ஒரே சீரான வேகத்தோடு சென்று கொண்டிருந்தது. கந்தப்பனுக்குப் பக்கத்தில் கிளீனர் உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில், சேரன் உட்கார்ந்திருந்தான். அவன் மடியில் டாலர் உட்கார்ந்திருந்தது. லாரியில் அவனை அழைத்துச் செல்ல, கந்தப்பன் ஒப்புக் கொண்டதும், அம்மாவிடம் ஊட்டிக்கே திரும்பவும் போவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். அப்போது தான், டாலரையும் உடன் அழைத்துக் கொண்டு போகும் எண்ணம் ஏற்பட்டது. அதனால் விஜய் வீட்டுக்குப் போனான். டாலரைத் தான் அழைத்துச் செல்வதாக விஜய்க்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டான். ஆனால் வாட்ச்மேனிடம் மாலையில் டாலரைத் திரும்பவும் அழைத்து வருவதாகக் கூறிவிட்டு, டாலருடன் லாரிக் கம்பெனிக்கு வந்துவிட்டான். சரியாக இரண்டு மணிக்கே லாரி புறப்பட்டுவிட்டது. வழியில் வெயில் உறைக்கத்தான் செய்தது. பவானியைக் கடக்கும்போது வெம்மை குறைந்தது; ஓரளவு இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது. ஒரு காசு செலவில்லாமல் சென்னைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தான், சேரன். லாரி, காவேரி மின் நகரைக் கடந்தபோது, சேரன் இடப்புறத்தில் பார்த்துக் கொண்டே வந்தான். சாலையின் இருபுறமும் கரும்பு செழித்து வளர்ந்து, கண்ணுக்கு அழகாகக் காட்சியளித்தது. ஒருமுறை அந்தக் காட்சியோடே பார்வையைச் செலுத்தி கழுத்தைத் திருப்பிப் பின்னே பார்த்தான். |