பக்கம் எண் :

 59

அது சாலை வளைந்து செல்லும் இடம். அதனால் லாரிக்குச் சிறிது தூரத்தில் ஒரு வெள்ளை அம்பாசிடர் வருவதும் அவன் பார்வையில் பட்டது.

காவேரி மின் நகரின் மின்சாரம் முழுவதும் அவன் உடம்பில் பாய்ந்தது போன்ற அதிர்ச்சி அடைந்தான், சேரன். ‘ஊட்டியில் விரட்டியவர்கள் வருகிறார்களா? சே... சே... அவர்களாக இருக்க முடியாது? அவர்களுக்கு நான் கோவை வந்ததோ, கோவையிலிருந்து லாரியில் புறப்பட்டதோ தெரியாதே !’ என்று நினைத்து, கழுத்தை வெளியே நீட்டி நன்றாகப் பார்த்தான்.

அதே கார் ! அதே குறுந்தாடி டிரைவர் ! பக்கத்தில்...

அவன் பார்ப்பதற்கு முன் கார் லாரியை நெருங்கி, அதை ஓவர் டேக் செய்து கடக்கத் தொடங்கி விட்டது. சேரன் பார்வையை வலப்பக்கம் திருப்புவதற்குள் கார், லாரியைக் கடந்து வேகமாகச் சென்றது. கொஞ்ச தூரம் சென்றதும் நடுச்சாலையில் கார் கிறீச்சிட்டுநிற்க, அதிலிருந்து ஜாக்கியும், பாபுவும் இறங்கி முன்னே வந்து சாலையில் குறுக்கே நின்றனர்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கந்தப்பன் பிரேக்கை அழுத்தினான்.

லாரி, தார் படிந்த சாலையை உழுது சென்று சட்டென்று நின்றது !

சேரனின் இதயமும் சட்டென்று ஒருவிநாடி நின்று விட்டது !