செயலாளன் நன்றி கூறியவுடன், நாட்டு வாழ்த்துப் பாடப்பட்டது. பின்பு கூட்டம் கலைந்தது. மாணவர்கள் கலகலப்போடு கலைந்தார்கள். ஏறத்தாழ அத்தனை பேரும் அன்று நடந்த சொற்பொழிவைப் பற்றிப் பேசிக் கொண்டே வெளியே வந்தனர். சேரன் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்தான். அவனுக்குப் பக்கத்தில் இன்னும் உட்கார்ந்தபடி யிருந்த விஜய்குமாரைப் பார்த்தான். அவன் தோளில் கை வைத்து உலுக்கி, “என்ன விஜய் ! புறப்படலையா? வீட்டுக்குப் போக வேண்டாமா?” என்று கேட்டான். அதன் பிறகுதான் விஜய் தன் பையுடன் எழுந்தான். சேரனும், விஜயும் பள்ளிக்கூடத்து மாடியிலிருந்து இறங்கினர் ; கட்டடத்தை விட்டு வெளியே வந்தனர். சாலையின் ஓரத்தில் நீலநிற பியட் கார் நின்றிருந்தது. அதன் டிரைவர், விஜயைப் பார்த்ததும், எழுந்து பின் சீட்டின் கதவைத் திறந்தான். விஜய் ஏறினான். சேரனும் ஏறினான். உடனே கார் புறப்பட்டது. பள்ளிக்கூடம் இருந்த அழகேசன் சாலையிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில், பாரதி பூங்கா அருகே விஜயின் பெரிய பங்களா இருந்தது. நடந்தே போகலாம். நடந்துபோக வேண்டும் என்று விஜயும் விரும்பினான். ஆனால் விஜயின் அம்மா ஒப்புக் கொள்ளவில்லை. “கோடீஸ்வரரின் குமாரன் நடந்து வர்றதா? கூடாது. காரிலேதான் வரணும். நடக்கணும்னு ஆசையிருந்தா காலையிலே வாக்கிங் போ” என்று கூறி விட்டாள். அதனால் விஜய் காரிலே வந்தான் ; காரிலே சென்றான். கோடீஸ்வரரின் மகனோடு நட்புக் கொள்ள எத்தனையோ பேர் முன்வந்தார்கள். ஆனால் விஜய் |