யாரிடமும் மூச்சு விடாதீங்க. உம்... வண்டி கிளம்பட்டும்.” அவனது பேச்சுக்கு அபிநயம் பிடிப்பதுபோல ரிவால்வர் மெல்ல அசைந்தது. ‘மகனின் நண்பன் சேரன், ஏன் கரும்புத் தோட்டத்தில் புகுந்து மறைந்தான்? அவனைப் பிடிக்க முற்படும் இவர்கள் யார்? சேரன் ஏதாவது குற்றம் செய்திருப்பானா?’ இத்தனை கேள்விகளும் கந்தப்பனின் மனத்திலே பிறந்தன. அவற்றுக்கு விடை காணும் ஆசையை ஜாக்கியின் கையில் காட்சிளித்த ரிவால்வர் விரட்டியது. அதோடு கந்தப்பன் அங்கேயே இருந்தால் தொல்லை வரும் என்றும் அது மிரட்டியது. கந்தப்பன் உடனே லாரியை ஸ்டார்ட் செய்தான். மறு நிமிடம் அந்த லாரி மெல்ல நகர்ந்து வேகமாகச் சென்றது. ஜாக்கியின் முகத்தில் புன்னகை. துப்பாக்கியை வாயருகே எடுத்துச் சென்று அதன் சாதனைக்காக அதற்கொரு முத்தம் இட்டான். பிறகு அதைப் பழையபடி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, கரும்புத் தோட்டத்தைப் பார்த்தான். அதற்குள் வீசிய காற்றால் தோட்டம் முழுவதுமே தலையாட்டுவது போல அசைந்து கொண்டிருப்பது தெரிந்தது. முன்பு போல தோட்டத்தில் யாரோ ஓடுவதால் ஏற்படும் சலனத்தைத் தனியே கண்டு பிடிக்க முடியவில்லை. சேரன் எங்கே? அவனைப் பிடிக்கச் சென்ற பாபு எங்கே? ஜாக்கியின் மனம் கேட்டது. |