அதேநேரத்தில் சாலையில் வந்த மற்றொரு லாரி ஹாரன் அடித்தபடி மெதுவாக அங்கே நின்று, சாலையின் ‘முக்கால் பகுதியை’ அடைத்துக் கொண்டு குறுக்கே நிற்கும் அம்பாசிடருக்குப் பக்கத்தில் உள்ள சிறிதளவு இடத்தில் ஆமை போல நகர்ந்து அதைக் கடந்து, பழையபடி வேகமாகச் சென்றது. ஜாக்கி அதைக் கண்டதும், அம்பாசிடரை நோக்கிச் சென்றான். அதில் ஏறி அமர்ந்தான். காரை ரிவர்ஸ் எடுத்து சாலையின் ஓரத்தில் மற்ற வண்டிகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் நிறுத்தினான். பிறகு மீண்டும் சேரன் புகுந்த கரும்புத் தோட்டத்தின் அருகே வந்தான். சேரன் எங்கே? அவனைப் பிடிக்கச் சென்ற பாபு எங்கே? ஜாக்கியின் மனம் கேட்டது. “ஒரு பையன் இவ்வளவு நேரம் தோட்டத்துக்குள்ளே ஓடுவானா? பாபு இன்னுமா அவனை விரட்டிக்கொண்டிருக்கிறான்?” ஜாக்கியின் மனம் அமைதி இழந்தது. அவன் கரும்புத் தோட்டத்தின் ஓரத்திலேயே நடந்து போனான். சிறிது தூரம் சென்றதும் கரும்புத் தோட்டத்தைப் பிரிக்கும் உயரமான வரப்புத் தெரிந்தது. ஜாக்கி அந்த வரப்பின்மீது நடந்தான். இருபுறத்து வயலையும் கூர்ந்து பார்த்தபடி நடந்தான். அவன் நடக்க நடக்க, ‘சேரன் எங்கே? பாபு எங்கே? என்று அவன் மனம் கேட்டுக் கொண்டே இருந்தது. வரப்பின்மேல் சுமார் பத்து நிமிடம் நடந்த பிறகு, எதிர்த்திசையில் யாரோவருவதைக் கண்டான். வருவது யார்? பாபுதானா? |