நின்னு பார்த்தா, கரும்புவயல் இன்னும் கடல்போலப் பரவியிருக்கு. இதுலே எந்த மூலையிலே அவன் இருக்கிறானோ? தெரியலே !” பாபு சொன்னான். “பாபு, மூன்றாவது முறையா பையன் தப்பிச்சுட்டான். பையன் முன்னாடி போனானா? இல்லை, உன்னை ஏமாத்தி பின்னாடி வந்து சாலைக்குப் போயிட்டானா?” “தெரியலே ! வா. ரோடுக்குப் போய்ப் பார்ப்போம் !” பாபுவும், ஜாக்கியும் வரப்பின் மீதே வேகமாக ஓடினார்கள். அவர்கள் சாலையை அடையும்போது இரண்டு லாரிகள் அவர்களைக் கடந்து ஓடின. சாலையில் வேறு யாரும் இல்லை. அவர்கள் ஓட்டி வந்த அம்பாசிடர்தான் அனாதையாக நின்று கொண்டிருந்தது. “பாபு, பையனோட ஒரு நாய் இருந்ததே... ?” “ஆமாம். அதையும் காணோம். அதுவும் அவனோடு ஓடியிருக்கும்.” ஜாக்கி சிறிது நேரம் யோசித்தான். பிறகு, “பாபு, பையன் சென்னைக்குப் போகிறவன். எப்படியும் சென்னைக்குத்தான் போவான். நீயும் நானும் வயலுக்கு மத்தியில் இருக்கும்போது அவன் சாலைக்குப் போய் ஏதேனும் லாரியில் ஏறிப் போயிருக்கலாம். அதனாலே நான் காரிலே சென்னைக்குப் போறேன். நீ இந்த வயலுக்குப் பின்னாடியிருக்கிற கிராமத்துக்குப் போய்ப் பாரு. கிராமத்துலே புதுசா ஒருத்தன் வந்தா உடனே தெரிஞ்சுடும். அதுவும் அழகான-உயர்ந்த ஜாதி நாயோட ஒரு பையன் வந்திருந்தா அவனைக் கண்டு பிடிக்கிறது சிரமமில்லை. பையன் கிடைச்சா விடாதே ! பிடிச்சுக்கோ. பையன் கிடைக்கலேன்னா கோயமுத்தூருக்குப் போய்ப் பாரு. பையன் கோவைக்குப் போக மாட்டான். எதுக்கும் அங்கே பாத்துட்டு, நீயும் சென்னைக்கு வந்துடு” என்றான். |