பக்கம் எண் :

66 

அப்போதே மெல்ல இருள் பரவ ஆரம்பித்து விட்டது. பாபு ‘சரி’ என்று ஒப்புக் கொண்டு, தான் திரும்பிய வரப்பின் மீதே மீண்டும் நடந்து, மறுமுனையிலிருக்கும் சிற்றூரை நோக்கிச் சென்றான்.

ஜாக்கி அம்பாசிடரில் ஏறி அதைக் கிளப்பினான். அப்போதும் அவன் மனம், ‘சேரன் எங்கே?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தது.

‘ஜாக்கி காரை வேகமாகச் செலுத்தினான். வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை. சென்னையிலிருக்கும் தன்னைச் சார்ந்த ஆட்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்குத் தொலைபேசி தேவை. அதுவும் ரகசியமாகப் பேசக் கூடிய தொலைபேசி வேண்டும். அதனால் வேலூர் வழியாகச் சென்னைக்குச் செல்ல விரும்பினான். வேலூர் ஜாக்கியின் சொந்தவூர். அவன் குடும்பமும் அங்கேதான் இருக்கிறது. வீட்டில் தொலைபேசியும் இருக்கிறது. அங்கே போனால் குடும்பத்தாரையும் பார்க்கலாம். தொலைபேசியில் பேசலாம். சிலமணி நேரம் நிம்மதியாகத் தூங்கலாம். மறுநாள் காலையில் மீண்டும் பயணத்தைத் தொடங்கி சென்னைக்குச் செல்லலாம்.

ஜாக்கி இந்தத் தீர்மானத்தோடு, காரை ஓட்டினான். சுமார் ஐந்துமணி நேரத்திற்கு பிறகு, இரவு பத்தரை மணிக்கு ஜாக்கியின் கார் வேலூருக்குள் நுழைந்தது. சைதாப்பேட்டைப் பகுதியில் கோட்டைப் பிள்ளையார் கோயில் தெருவில் அவன் வீடு இருக்கிறது. ஆனால், அது கார் நுழைய முடியாக குறுகலான... வளைந்து நெளிந்து செல்லும் சந்து. அதனால் அதை ஒட்டிய சாலையில் காரை நிறுத்தி விட்டுத் தன் வீட்டை நோக்கி நடந்தான்.

அப்போதும் அவன் மனம் ‘சேரன் எங்கே?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தது.