சேரன் பார்வையைச் சுழற்றினான். பார்வை படிந்த வரையில் யாரும்தென்படவில்லை. அவன் மெதுவாகக் காரிலிருந்து இறங்கினான். டாலரையும் இறக்கிவிட்டான். பிறகு டிக்கியின் கதவை மூடினான். நின்ற நிலையில் சேரன் கலங்கரை விளக்குப்போலத் தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். யாரும் கண்ணில் படவில்லை. ‘ஜாக்கி நம்மைப் பார்ப்பதற்குள் இங்கிருந்து போய்விட வேண்டும்’ என்று நினைத்தான். ஜாக்கி எந்த வீட்டில் நுழைந்தான் என்பது அவனுக்குத் தெரியாது. அதனால் அம்பாசிடர் வந்த வழியே நடந்தான். டாலரும் அமைதியாக அவனைப் பின் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் ஒரு சாலை குறுக்கிட்டது. அதைக் குறுக்கே கடந்து எதிரே தெரிந்த குறுகலான சந்திலே நடந்தான். அங்கே எந்த வீட்டுக்கும் திண்ணை இல்லை. சட்டென்று ஒரு வீட்டின் முன்நின்றான். அது ஒரு ஓட்டு வீடு. அதிலே இரண்டு முழம் அகலத்தில் ஒரு திண்ணை இருந்தது. சேரன் அந்தத் திண்ணையில் ஏறிப் படுத்துக்கொண்டான். டாலரும் அவன் அருகே படுத்துக்கொண்டது. சேரன், ‘டாலர் ! இதுவரை சத்தம் போடாம இருந்தே. இப்பவும் சத்தம் போடாமத் தூங்கு’ என்று கூறினான். டாலரை ஒரு கையால் தழுவிக் கொண்டே அவன் தூங்கினான். சேரன் எப்படிக் காருக்கு வந்தான்? டாலரைத் தூக்கிக் கொண்டு, கரும்புத் தோட்டத்தில் நுழைந்து கொஞ்ச தூரம் ஓடினான், சேரன். அங்கே தோட்டத்தின் நடுவே, கரும்புகளுக்கு இடையே ஒரு பத்து வயசுப் பையன் உட்கார்ந்து கரும்பைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான். கரும்பைத் திருடித் தின்ன, கரும்புத் தோட்டமே ஏற்ற இடம் என்பது அவன் கருத்து. திடீரென்று தோட்டத்துக்குள் சேரன் நுழையவே தோட்டத்தைச் சேர்ந்த யாரோ தனது திருட்டைத் தெரிந்து |