கொண்டு பிடிக்க வருவதாக நினைத்த பையன் அந்த இடத்தை விட்டு மின்னல் வேகத்தில் ஓடினான். அதைச் சேரன் பார்த்த போதே தனக்குப் பின்னே யாரோ வருவதை உணர்ந்தான். உடனே, பக்கவாட்டில் மெல்ல விலகி, டாலரைப் பிடித்தபடியே உட்கார்ந்து விட்டான். சேரனைப் பிடிக்கக் கரும்புத் தோட்டத்தில் புகுந்த பாபு, முன்னே பையன் ஓடும் அசைவைக் கண்டு, அந்தத் திசையில் ஓடினான். பையன் கரும்புத் தோட்டத்தில் ஓடிப் பழக்கப்பட்டவன். அதனால் பாபுவின் கையில் சிக்காமல் ஓடிவிட்டான். சேரன் மெல்ல நகர்ந்து, கரும்புத் தோட்டத்தின் விளிம்புக்கு-சாலையைத் தொடும் விளிம்புக்கு வந்தான். ஜாக்கி அப்போதுதான் காரை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, கரும்புத் தோட்ட வரப்பில் நடந்து சென்றான். அதைப் பார்த்தபோது சேரனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த இடத்தில் அவர்களிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள, அவர்களது காரே சரியான இடம் என்று நினைத்தான். உடனே சாலைக்கு வந்தான். காரின் டிக்கியை இழுத்துப் பார்த்தான். அது பூட்டப்படவில்லை. அதனால் அவன் டாலருடன் அதில் ஏறிக் கொண்டு, டிக்கியை மூடிக்கொண்டான். ஜாக்கி, இப்படி நடக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. சேரன் ஏதோ ஒரு லாரியில் ஏறிப்போய் விட்டதாக நினைத்து ஏமாந்து விட்டான். ****** ‘லொள் லொள்’ என்னும் டாலரின் குரைப்புச் சத்தம் தூக்கத்தைக் கலைக்க கண்ணைத் திறந்தான், சேரன். |