பக்கம் எண் :

 71

கிட்டிருக்கிறப்போ... ” என்று சொன்னது, அவன் மனத்தைத் தொட்டது.

“தங்கச்சி, நீ இப்போ பள்ளிக்கூடத்திலே படிக்கலையா?”

பாப்பாவின் மலர்ந்த முகம் திடீரென்று குவிந்தது. இல்லை என்பதைத் தலை அசைவின் மூலம் தெரிவித்தாள்.

“ஏன்? படிப்பிலே விருப்பம் இல்லையா?”

“பள்ளிக்கூடம் பிடிக்கும் ! பாடம் படிக்கிறதும் பிடிக்கும். ஐஞ்சாவது வரை படிச்சேன். போன வருஷம் எங்கப்பா செத்துட்டார். அப்புறம் எங்கம்மா சாலை ஓரத்திலே காய்கறிவிக்கிறாங்க. அவங்களுக்கு உதவியா கடையைப் பாத்துக்க, என் படிப்பை நிறுத்திட்டாங்க.”

பாப்பா சொன்னதைக் கேட்டதும் சேரன் மனம் கலங்கியது; கண்களும் கலங்கின. ‘மலைவாழை அல்லவோ கல்வி, அதை வாயார உண்பாய், போ என் புதல்வி’ என்னும் பாரதிதாசன் பாடல் நினைவுக்கு வந்தது. ‘இதோ ஒரு சிறுமி படிக்க விரும்புகிறாள் ! ஏழ்மை அவள் படிப்பைத் தடுக்கிறதே? அவன் சிந்தனையை டாலரின் குரல் தடுத்தது.

டாலர் குரைத்ததும், “இது ஏன் இப்படிக் கத்துது? ஒரு வேளை பசிக்குதோ?” என்று கேட்டாள் பாப்பா.

சேரன் திடுக்கிட்டான்.

நேற்றுப் பகலிலிருந்து டாலருக்கு உணவில்லை. சொகுசாக வளர்ந்த டாலருக்குப் பசித் துன்பம் புதுசாக இருக்கும். டாலருக்கும் பசிக்கும் என்பதைச் சேரன் உணரவில்லை. ஆனால் சிறுமி உணர்கிறாளே ! பெண் மனந்தான், வயது வித்தியாசம் இல்லாமல் பிறர் பசியை நினைக்குமோ?

“ஆமாம் பாப்பா. பசிதான் !”