“வீட்டிலே பழையது இருக்கு. கொண்டு வரட்டுமா?” சேரன் சிரித்தான். “இது பழையது சாப்பிடற ஏழை வர்க்கம் அல்ல; பணக்காரவர்க்கம்!” “பின்னே, இது என்ன சாப்பிடும்?” “காலைலே நல்ல பாலிலே ஓட்ஸ் போட்டுக் காய்ச்சி, அதிலே ரெண்டு முட்டையை உடைச்சி ஊத்திக் கொடுக்கணும். இதுதான் டிபன்.” “உம்... அப்புறம் சாப்பாடு?” “கால் கிலோ கறியைக் கொத்தி அதை அரிசியோடு ஒண்ணா வேகவச்சிப் பகல் சாப்பாடாய்க் கொடுக்கணும்.” “அம்மாடி ! இதைப் பார்த்ததும் இது மாதிரி நாயை வளர்க்கணும்னு ஆசை வந்துது. இதோட சாப்பாட்டைக் கேட்டதும், அது போயிடுச்சு.” சேரன் சிரித்தான். “இப்போ இதுக்கு எப்படி ஆகாரம் தரப் போறே?” சேரனுக்கும் கவலைதான். சட்டைப் பையில் கைவைத்துப் பார்த்தான். விஜய் கொடுத்த பணத்தில், பஸ்ஸு க்கும், நேற்றுப் பகல் லாரி கம்பெனி அருகே சாப்பிட்ட பகலுணவுக்கும் போக மீதி ஆறு ரூபாய் ஐம்பது காசு சட்டைப் பையில் போட்டிருந்தான். ஒன்றாக மடித்த ஐந்து ரூபாயும் ஒரு ரூபாயும் கிடைத்தன. ஐம்பது காசைக் காணோம். ஐந்து ரூபாயைப் பாப்பாவிடம் கொடுத்து, “தங்கச்சி, உனக்குச் சிரமம் இல்லேன்னா, ஆழாக்குப் பாலும் ரெண்டு முட்டையும் வாங்கிவா. அதோடே எனக்கு சாப்பிட ஐஞ்சாறு இட்லி வாங்கி வா.” |