பக்கம் எண் :

 73

“சரி” என்று பணத்தை வாங்கிக் கொண்ட பாப்பா, வெறுமனே மூடியிருந்த வீட்டின் கதவைத் திறந்து, உள்ளே போய், ஒரு கையில் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும்,ஒரு மூடியில்லாத கிண்ணமுமாக வெளியே வந்தாள்.

“வீட்டைப் பார்த்துக்கோ” என்றபடி இறங்கிய பாப்பாவிடம், “தங்கச்சி இது என்ன ஊர்?” என்று கேட்டான்.

“வேலூர். சேலம் வேலூரில்லே ; ராயவேலூர் ! ஆர்க்காட்டு வேலூர். இது எந்த ஊருன்னுதெரியாம, இங்கே எப்படிண்ணா வந்தே?”

பாப்பா கேட்டாள்.

“தங்கச்சி ! ஒரே பசி ! முதல்லே டிபன் ! அப்புறம் நான் வேலூர் வந்த கதை. சரியா?”

“சரி.”

பாப்பா இறங்கி, சந்திலே ஒரு பந்தைப் போலத் துள்ளிச் சென்றாள்.

அரைமணி நேரத்தில் பாப்பா திரும்பி வந்தாள். அவளே பாலைக் காய்ச்சிக் கொடுத்தாள். அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கி டாலருக்குக் கொடுத்தான். அவனும் பல்விளக்கி, முகம் கழுவிக் கொண்டு, இட்லி சாப்பிட்டான். சாப்பிட்டபடியே தான்வேலூர் வந்த விதத்தைச் சொல்லி, ஒரு முக்கியமான-நாட்டுக்குப் பயன்படும் ஒரு நல்ல செயலுக்காகச் சென்னைக்குப் போக வேண்டும்-அதுவும் அன்றைக்கே போக வேண்டும் என்பதையும் சொன்னான். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்பதையும் எப்படியாவது சென்னைக்குப்போயே தீர வேண்டும் என்பதையும், அழுத்தமாகக் கூறினான்.