“பாப்பா ! நீ ரொம்ப நல்லவ. கடவுள் உன்னைப் போல இருக்கிறவங்களிடம் பணம் கொடுத்திருந்தா நீயே எனக்கு உதவி செஞ்சிருப்பே ! இம்... இப்ப என்ன செய்யறது?” சேரன் பெருமூச்சு விட்டான். “அண்ணா நீங்க இங்கேயே இருங்க. நான் இப்பவே வரேன்” என்று கூறி விட்டுப் பாப்பா மீண்டும் அந்தச் சந்திலே ஓடினாள். அரைமணி நேரம் ஆனது. பாப்பா வரவில்லை. பாப்பாவுக்குப் பதில் ஒரு அம்மா வந்தாள். திண்ணையிலிருந்த சேரனைப் பார்த்து, “நீதானே சேரன் ! உள்ளே வாப்பா !” என்றபடி வீட்டுக்குள்ளே சென்றாள். முகச்சாடையிலிருந்தே அவள் பாப்பாவின் தாய் என்பதைத் தெரிந்து கொண்டான், சேரன். முகத்தில் திருநீறு ! என்றாலும் அதிலே ஒரு பிரகாசம் ! பேரொளி ! அதுதான் அருள் ஒளியோ? சேரன் உள்ளே போனான். “தம்பி, பாப்பா வந்து விஷயத்தைச் சொன்னா. அவங்கப்பா இருந்தப்போ, அவரு அதுக்குக் காசு தருவாரு. அதிலே இருபத்தைஞ்சு காசு, ஐம்பது காசு நாணயங்களை ஒரு உண்டியில்போட்டு வந்தா. பாதி நிறைஞ்சப்போ அவரு போயிட்டாரு. உண்டிக் காசு அவளுடையது. அதனாலே எனக்குக் கஷ்டம் வந்தப்போகூட அதைத் தொடலே. அதை உடைச்சி அதிலேயிருக்கிற பணத்தை உனக்குக் கொடுக்கச் சொல்லிட்டா. அவளைக் கடையிலே விட்டுட்டு வந்திருக்கேன்.” அந்த அம்மாள் பேசிக்கொண்டே, மாடத்திலிருந்த உண்டியை எடுத்தாள். அதை உடைக்க முயன்றபோது, சேரன் தடுத்தான். |