பக்கம் எண் :

  

7
அறிவே வேலை செய் !

பாப்பா சோகமாக நின்ற சேரனையும் அவனிடமிருந்த நாயையும் ஒரு நிமிடம் பார்த்தாள். யோசித்தாள். “அண்ணா ! ஒரு நிமிஷத்துலே வரேன்” என்று சொல்லி விட்டு ஓடினாள். பத்து நிமிடத்துக்குப் பிறகு கையிலே ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வரும் அட்டைப் பெட்டியோடு திரும்பினாள்.

“அண்ணா ! லாங் பஜார் தெருவில் தெரிஞ்சவங்க கடையிருக்கு. அங்கிருந்து இதை வாங்கிட்டு வந்தேன். நாயை இந்தப் பெட்டியில் வைத்து பஸ்ஸிலே எடுத்துட்டுப் போ. வழியிலே நாய் குலைக்காமல் இருக்கணும்” என்றாள் பாப்பா.

“இது ரொம்ப புத்திசாலி நாய். சொன்ன சொன்னபடி கேட்கும்” என்று கூறியபடி அட்டைப் பெட்டியில் டாலரை உட்கார வைத்தான். பெட்டியை மூடினான். பாப்பா கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கயிற்றால் அதைக் கட்டிவிட்டுப் புறப்படத் தயாரானான்.

இதற்குள் முதலில் நின்றிருந்த சென்னை பஸ் போய்விட்டது. வேறொரு பஸ் வந்து நின்றது. சேரன் இரண்டாம் முறையாகப் பாப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி, சீட்டுக்கடியில் பெட்டியை வைத்தான். சன்னல் ஓரம் உட்கார்ந்தான். பாப்பா வெளியே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள். சுமார் பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு பேருந்து புறப்பட்டது.