பாப்பா ‘டாடா’ காட்டினாள். சேரனும் கை அசைத்து விடை பெற்றான். பேருந்து சென்னை செல்லும் வரை, தொல்லை ஏதும் ஏற்படவில்லை. ராஜா அண்ணாமலை மன்றத்துக்குப் பின்னே இருந்த பேருந்து நிலையத்தை அடைந்தது. வழியில் இறங்கியவர் போகப் பேருந்தில் சுமார் பத்துப் பேர் இருந்தனர். அனைவரும் இறங்கியபின், அட்டைப் பெட்டியுடன் சேரன் இறங்கினான். முதல்வேலையாக அட்டைப்பெட்டியின் பிளாஸ்டிக் கயிற்றை அவிழ்த்து, டாலரை வெளியேவிட்டான். “டாலர் ! உனக்கு இரண்டாம் முறையாய்ச் சிறைவாசம் ! இனிமே இப்படித் துன்பப் படற நிலை வராது. இன்னிக்கு உனக்கு ஜெம்ஸ் வாங்கித் தரேன்” என்று கூறினான். டாலருக்கு, காட்பரீஸின் ஜெம்ஸ் பிடிக்கும். அதை எவ்வளவு உயரத்தில் வீசினாலும் சரி, டாலர் காட்ச் பிடித்து உள்ளே தள்ளுமே தவிர ஒன்றுகூடத் தரையில் விழாது. அன்றைக்கு ஒரு சிறிய பாக்கெட் ஜெம்ஸ் வாங்கிக் கொடுக்க முடிவு செய்தான், சேரன். “சென்னையை அடைந்துவிட்டோம். அடுத்து என்ன செய்ய வேண்டும்? ஆமாம், போன்செய்ய வேண்டும்” என்று நினைத்த சேரன், சுற்றும் முற்றும் பார்த்தான். சற்று தூரத்தில் இருந்த ஊனமுற்றவர் இயக்கும் தொலைபேசியை அடைந்தான். “என்ன நம்பர்?” ஊனமுற்றவர் கேட்டார். தேனீ கூறிய எண் என்ன? ஆறு எண்களைக் கூறினான் தேனீ. சேரன் அதைக் குறித்துக்கொள்ளவில்லை. அந்த எண் நினைவிருக்குமா? |