பக்கம் எண் :

 79

“அறுபத்து ஒன்பது-மூணு-அறுநூத்து நாற்பத்து ஒண்ணு.”

ஊனமுற்றவர் எண்ணை எழுதிக் கொண்டே சேரனை நிமிர்ந்து பார்த்தார். டெலிபோன் நம்பரை ரெண்டு ரெண்டாகச் சொல்வார்கள். அல்லது மூன்று மூன்றாகச் சொல்வார்கள். இவன் ஏதோ புதுமுறையில், முதலில் ரெண்டு எண் - பிறகு ஒரு எண் - பிறகு மூன்று எண் என்று சொல்கிறானே ! - என்று யோசித்தவாறு, சேரன் சொன்ன எண்களைச் சுழற்றினார்.

தேனீ ஆறு எண்களைச் சொன்ன போதே, அதை மறந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்த சேரன் அந்த எண்களை நினைவுபடுத்திக் கொண்டான். 693641. முதல் இரண்டு எண், அவன் பிறந்த வருடம். அவன் 1969-இல் பிறந்தான் ; மூன்றாம் எண் அவன் வீட்டுக்கதவு எண் : 3 ; கடைசி மூன்று எண், கோயமுத்தூர் அஞ்சல் பின்கோடின் முதல் மூன்றுஎண் : 641. இப்படி அப்போதே பிரித்து மனத்தில் பதித்துக் கொண்டான். அதனால் இப்போது அதே முறையில் தயக்கம் இல்லாமல், எண்களைச் சொன்னான். சேரன் புத்திசாலி என்பதில் ஐயம் உண்டா?

ஊனமுற்றவர் டெலிபோன் ரிசீவரை அவனிடம் நீட்டினார். வாங்கிய சேரன் ‘ஹலோ’ என்றான்.

மறுமுனையில், “யெஸ் ! உங்களுக்கு யார் வேணும்?” என்ற குரல் ஒலித்தது.

சேரன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “சார் ! நான் ஊட்டியில் தேனீயைப் பார்த்தேன். ஓ. பி. யு. வின் தமிழ்நாட்டுத் தலைவரிடம் பேச வேண்டும்” என்றான்.

மறு முனையில் அப்போது, ஓ. பி. யு. வின் தமிழ்நாட்டுத் தலைவனேதான் பேசினான். அதனால் “ஸ்பீக்கிங்” என்று சொன்னான்.