பக்கம் எண் :

80 

“சார், தேனீ என்னிடம் ஒரு முக்கியமான பொருளைத் தந்திருக்கிறார். அதை உங்களிடம் நேரில் சேர்ப்பிக்க வேண்டும் என்பது தேனீயின் வேண்டுகோள்.”

“இப்போது எங்கிருந்து பேசுகிறாய்?”

“வேலூர் பஸ் வந்தடையும் ஸ்டாண்டிலிருந்து... ஜஸ்ட் எ மோமண்ட் ப்ளீஸ்” என்ற சேரன், தொலைபேசி இயக்கும் நபரிடம், “இது என்ன இடம்?” என்று கேட்டான். அவர், “பஸ் ஸ்டாண்ட். ஃபுரூட் மார்க்கெட்டுக்குப் பின்னாடி இருக்கிற பஸ் ஸ்டாண்ட்” என்றார். சேரன் அதையே போனில் சொன்னான்.

“உன் பெயர்... ?” மறுமுனை கேட்டது.

“சேரன்.”

“சேரா ! நீ இப்போது இருக்கிற இடத்திலேயே இரு எங்கேயும் போகாதே. நான் சுமார் இருபது நிமிடத்திலே அங்கே வரேன். நான் என்னை ஹனிமேன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வேன். ஓ. கே?”

“ஓ. கே. சார் !”

சேரன் போனை வைத்துவிட்டான்.

ஹனிமேன், இன்னொருவனுடன் உடனே காரில் ஏறி, அதை ராக்கெட்டாக்கினான். பதினைந்தாவது நிமிடம் பேருந்து நிலையத்தை அடைந்தான். தொலைபேசியைத் தேடிக் கண்டுபிடித்தான். அங்கே சேரனைக் காணோம் ! தொலைபேசியின் அருகே ஊனமுற்றவர் தவிர யாரும் இல்லை.

ஹனிமேன் ஊனமுற்றவரிடம், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்கே ஒருவன் - அநேகமா ஒரு பையன் அல்லது இளைஞன் போன்செய்துட்டுக் காத்துக்கிட்டிருந்தானா?” என்று கேட்டான்.