“எத்தனையோ பேர் போன் பண்றாங்க. நிக்கறாங்க. போறாங்க. யாரை நீங்க கேக்கறீங்க?” ஹனிமேன், தொலைபேசி இருந்த சிறு மேசையைப் பார்த்தான். அதன் மேலே விரிந்து கிடந்த நோட்டுப் புத்தகத்தில், தொலைபேசி எண்கள் ஸ்ரீராமஜெயம் எழுதப்படுவது போல வரிசையாய் இருந்தன. கடைசி எண்ணுக்கு முன்னே 693641 இருந்தது. ஹனிமேன் பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாயை எடுத்து அந்த நோட்டை நீளவாட்டில் இரண்டாகமடித்து, அதனால் 693641 எண்ணைச் சுட்டிக்காட்டி, “இந்த எண்ணை அழைத்துப் பேசியவன் என்ன ஆனான்?” என்று கேட்டுவிட்டு, அந்த நோட்டை அவனிடம் தள்ளினான். ஊனமுற்றவர், பொருள் ஞானம் பெற்றவர். அந்த நோட்டை அப்படியே எடுத்துக் கொண்டு, “இந்த எண்ணில் பேசியவன் சுமார் பதினாலு வயசுள்ள பையன். பேசிட்டு இங்கேயே நின்னான். அப்போ ஒரு ஆட்டோ வந்தது. ஆட்டோ-டாக்ஸி எல்லாம் இங்கே வரக்கூடாது ; என்றாலும் ஆட்டோ வந்தது. அதிலே இரண்டு பேர் இருந்தாங்க. ஒருவன் தம்பின்னு கூப்பிட்டதும், இவன் அருகே போனான். ஆட்டோவில் இருந்தவன், இவனை அப்படியே இழுத்து உள்ளே தள்ளிக்கொண்டான். இவன் கத்தினான். இன்னொருவன் வாயைப் பொத்தினான். அதே நேரத்தில் ஒரு அழகான நாய் ஆட்டோமீது பாய்ஞ்சது. உள்ளே இருந்தவன் விட்ட உதையிலே நாய் வெளியே விழ, ஆட்டோ பறந்துட்டுது” என்று கூறி முடித்தான். ஹனிமேன் முகம் வாடியது. “பாவம் சின்னப் பையன் ! யாரிடம் மாட்டிக் கொண்டானோ?” என்று நினைத்த ஹனிமேன், “அந்த ஆட்டோ நம்பர் தெரியுமா?” என்று கேட்டான். |