பக்கம் எண் :

8 

நின்றது. இப்போதும்கூட அவர் கூறிய சொற்கள் காதிலே ஒலித்தன. அதனால், “இல்லை விஜய், அவர் பேச்சு கல் மேல் எழுத்துபோல என் மனத்திலே பதிந்திருக்கு” என்று கூறினான்.

“சேரா ! நமது வேலை-கடமை எல்லாம் படிப்பதும் ஆடிப் பாடி ஆனந்தம் கொள்ளுவதும்தான் என்று நினைத்தேன். அவர் நம்மை காந்தி-நேரு நிலைக்கு உயர்த்தி விட்டார் ; திலகர்-பாரதியார் நிலைக்குச் சமமாக்கி விட்டார். ஏட்டைச் சுமக்கும் சிறுவர்களே, நீங்கள்தான் நாட்டைக் காக்க வேண்டும் என்று கூறினார். கூடவே கென்னடியின் பொன்மொழியையும் சொன்னாரே. நினைவிருக்கிறதா?”

சேரன் நினைவிலும் அது நிலைத்திருந்தது.

“நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே ! நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்” என்று கென்னடி சொன்னார்.

அதைக் கேட்டதும் விஜயின் முகம் மலர்ந்தது.

“ஆமாம் சேரா ! “கென்னடி இப்படிப் பொதுவாகக் கூறினார். அது பெரியவர்களுக்கு உரியது என்று ஒதுக்காதீர்கள். அது உங்களையும் நோக்கிச் சொன்னதுதான். ‘இளங்கன்றுதான் பயம் அறியாது. பயம் அறியாதவர்கள் தான் நாட்டுக்குச் சேவை செய்ய முடியும்’ என்றுகூறினார். சேரா ! நம் நாட்டு விடுதலைக்காக நேதாஜி சிங்கப்பூரில் படை அமைத்துப் போரிட்டபோது பாலர்கள் செய்த சேவையை எப்படி விளக்கினார் !”

சென்னை அறிஞர் அந்தச் சம்பவத்தைச் சொல்லும் போது அரங்கத்திலும் அவையிலும் ஒரே அமைதி. சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவம் அமைத்த நேதாஜி