பக்கம் எண் :

 83

சென்னையில் ஒருவரிடம் கொடுக்கச் சொன்னான். இல்லையா?”

சேரன் இப்போதும் பதில் சொல்லவில்லை.

“மாது ! பையன் பரிசு வாங்காம, எதுவும் சொல்ல மாட்டான். காட்டு உன் கைவரிசையை.”

ஜாக்கி சொன்னதும், மாது என்று அழைக்கப்பட்டவன் முன்னே நகர்ந்தான். அவனை மாது என்பதைக் காட்டிலும் மாடு என்று, அதுவும் எருமை மாடு என்று அழைக்கலாம். அந்தமாது - அந்த எருமை மாடு சேரனின் அருகே வந்து நின்றான். கண்ணிமைக்கும் நேரத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான். “அம்மா !” என்று அலறியபடி சுருண்டு விழுந்தான் சேரன். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. தாடை வலித்தது.

எருமை மாடு இரண்டடி எடுத்து வைத்து, தரையிலே சுருண்டு விழுந்த சேரனைக் காலால் உதைத்தான். இரும்பு உருளை உருண்டு செல்வதுபோல் சேரன் வேகமாக உருண்டு அருகே இருந்த சுவரில் மோதிக்கொண்டான்.

எருமை மாடு அவனை நோக்கி நகர்ந்தான்.

தலையிலே வலி - தாடையில் வலி - காலால் உதைபட்ட இடுப்பிலே வலி !

சேரன் துடித்துப் போனான். அவன், “அடிக்காதே ! அடிக்காதே ! சொல்லிடறேன் !” என்று அலறினான்.

ஜாக்கியின் முகத்தில் புன்னகை. அவன் கை நிறுத்து என சாடை காட்ட, எருமை மாடு பின்னே நகர்ந்து நின்றான்.

சேரன் சுருண்ட நிலையிலிருந்து நிமிர்ந்து, விழுந்த நிலையிருந்து உட்கார்ந்து, சுவரிலே சாய்ந்து கொண்டான்.