காய்ச்சல் வந்தால்கூட மூன்று நாள் படுத்திடுவேன்... எனக்கு மனபலமும் கிடையாது.” விஜயிடம் முன்னர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. உடல் பலம் இல்லை ! மனபலம் இல்லை ! ஆனால்... அறிவு பலம்... ? சேரன் நினைத்தான். அவன் புத்திசாலி என்று அம்மா சொல்வாள் ! ஆசிரியர் கேள்வி கேட்கும்போது அவன் பதில் சொல்லும் திறமையை அதே ஆசிரியர் எத்தனை முறை புகழ்ந்துள்ளார்; எதிரியின் காருக்குள்ளே, அவனோட பயணம் செய்தது புத்திசாலித்தனம் இல்லையா? சேரா, ஆற்றல் இல்லாவிட்டால் என்ன? அறிவு இருக்கிறது ! அதைப் பயன்படுத்து ! சேரனின் மனம் கூறியது. சேரன் நம்பிக்கையோடு கண்களைத் துடைத்துக் கொண்டான். எதிரே பார்த்தான். எருமைமாடு எடுத்துப் போட்ட ரெண்டு ரூபாயும் சில்லறையும். அவற்றை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பிறகு அறையை ஆராய்ந்தான். சுவரில் திருமுருகன் வேலோடு குறுநகை புரிந்து அஞ்சாதே என்று அபயகரம் காட்டும் காலாண்டர். தேதி பதின்மூன்று ! செவ்வாய்க்கிழமை ! “நவம்பர் பதினாலாம் தேதிக்குள் சென்னையில் சேர்த்துவிட வேண்டும்” - தேனீ சொன்னது நினைவுக்கு வந்தது. அப்படியானால் இன்றைக்குள்ளே பிலிம் ஓ. பி. யு. வின் தலைவனை அடைய வேண்டும். அதற்கு இப்போதே இங்கிருந்து தப்ப வேண்டும். |