பக்கம் எண் :

88 

றான். முடியவில்லை. கதவுகளின் மறுபுறம், அவை திறக்காதபடி தடுப்புக்கட்டை இருக்கும் போலும்.

சேரன் மேலும் அறையை ஆராய்ந்தான். அறை வாசலில், கதவு முழுவதையும் மறைக்கும் திரை, இரு கூறாகப் பிரிக்கப்பட்டு, இரண்டும் கட்டப்பட்டு ஓரத்தில் திரண்டு தொங்கின. சுவரில் அவன் முன்பே பார்த்த திருமுருகன் காலாண்டர். அறையின் ஒரு மூலையில் சிறியமேசை - அறையில்லாத மேசை. அதன் எதிரே ஒற்றை நாற்காலி.

அவ்வளவு தான் !

அவ்வளவு தானே?

சேரன் கண்களைச் சுழல விட்டான்.

மேசையின் கீழே ஒரு சிவப்பு நிற பிளாஸ்டிக் கூடை.

சேரன் அந்தக் கூடையை எடுத்துப் பார்த்தான். அதில் காலியன ஒரு சிகரெட் பாக்கெட் இருந்தது. அதே போல ஒரு தீப்பெட்டி. அதுவும் காலிதான். பெட்டியில் குச்சிகள் இல்லை.

சேரன் மீண்டும் அறை முழுவதையும் நோட்டமிட்டான்.

ஒரு காலண்டர், சன்னல் திரைகள், கதவின் திரை, மேசை, நாற்காலி, பிளாஸ்டிக் குப்பைக் கூடை, அதில் காலியான சிகரெட் பாக்கெட்டும் தீப்பெட்டியும்.

இவற்றில் எதைக் கொண்டு தப்பித்துச் செல்வது?

“அறிவே வேலை செய்.”

பிரார்த்தனை தொடர்ந்தது.

திடீரென்று அவன் அறிவு வேலை செய்தது !