“சரி ! அழைச்சுட்டு வரரேன்.” “டிரைவர், உன் டாக்ஸி நம்பர் என்ன?” “எம். டி. யு. டபுள் ஃபோர் டபுள் ஃபைவ்” என்று தயங்காது சொன்னான் டிரைவர். சேரன் போனை வாங்கிப் பேசினான். “டாக்ஸியில் வந்துடறேன் சார்” என்று கூறிவிட்டுப் போனை வைத்தான். பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து மேசை மேல்வைத்து, “தாங்கஸ் சார்” என்றான். “ரெண்டு ரூபாயா? ஒரு ரூபாய் எங்கிட்ட இல்லே. ஒரு ரூபாய் இருந்தா கொடு” என்றார் சுழல் நாற்காலிக்காரர். “மீதி ஒரு ரூபாய் அப்புறம் வந்து வாங்கிக் கொள்கிறேன் சார்” என்று கூறிவிட்டு சேரன் கடையிலிருந்து இறங்கினான். டிரைவர் அதற்கு முன்னரே இறங்கி விட்டான். டிரைவர் டாக்ஸியில் ஏறி, கதவைத் திறந்துவிட்டான். சேரன், டாக்ஸியின் முன்புறமாகச் சுற்றிக்கொண்டு போய் டாக்ஸியில் ஏறினான். அப்படி முன்புறமாகச் சென்ற போதே டாக்ஸியின் நம்பர், எம். டி. யு. 4455 என்பதைப் பார்த்துக் கொண்டதால், ஒரு திருப்தி. அடுத்த நிமிடம் டாக்ஸி ஓடியது. அரை மணி நேரத்தில் ஹனிமேன் அவனைச் சந்தித்தான். டிரைவருக்குப் பணம் கொடுத்து அனுப்பி விட்டு, சேரனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றான். ஹனிமேன் சேரனைப் பார்த்தான். அவன் எதிர் பார்த்ததைக் காட்டிலும் வயதிலே குறைந்தவன். மெலிந்தவன். ஆனால் முகத்திலே அறிவும் திறமையும் தெரிந்தன. “சேரா! ஏதாவது சாப்பிடுகிறாயா !” என்று கேட்டான் ஹனிமேன். |