பக்கம் எண் :

96 

காலையில் வேலூரில் சாப்பிட்ட சேரன், பிறகு ஒன்றுமே சாப்பிடவில்லை. வயிறு ‘பசி !’ ‘பசி !’ என்று கூவியது. என்றாலும், “சார், நான் முதலில் சொல்ல வேண்டியதைச் சொல்லிடறேன். பிறகு சாப்பிடறேன்” என்றான், சேரன்.

ஹனிமேன் அப்படியும் அறைக்கு வெளியே போய்ச் சேரனுக்குச் சாப்பிட டிபன் கொண்டு வரச் சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தான்.

சேரன், விஜயின் பிறந்த நாளுக்காக ஊட்டிக்குச் சென்றது முதல் அன்று அங்கு வந்து சேர்ந்ததுவரை நடந்த அனைத்தையும் சொன்னான். ஹனிமேன், ஏழு உலக அதிசயங்களையும் ஒன்றாகக் கண்டதுபோல் வியந்து போனான். உளவுத் துறையில் பணிசெய்ய வருகிறவர்களுக்குப் பயிற்சி தருகிறார்கள். பயிற்சியைப் பெற்ற ஒரு சிறந்த வீரனின் அஞ்சாமை - ஆற்றல்- அறிவுத் திறம் ஆகிய அனைத்தும் இந்தச் சிறுவனிடம் இருப்பதைக் கண்டு ஹனிமேன் உள்ளம் திகைத்தது ! உடல் சிலிர்த்தது ! சேரனைப் போன்ற தேசப்பற்றுள்ள வீரச்சிறுவர்கள் சில நூறு பேர் இருந்தால் போதும் ! எந்த வல்லரசும் இந்தியாவைக் கண்டு வணங்கும் - ஹனிமேன் நினைத்தான்.

அறைக்குள் டிபன் வந்தது. அதைச் சாப்பிடத் தொடங்கும் முன், “சார், என் டாலரை உடனே கண்டு பிடிக்கணும்” என்று கூறினான், சேரன்.

“ஆமாம் சேரா ! காக்கர்ஸ் ஸ்பானியல் விலை உயர்ந்த - அழகான நாய். அதை யார் பிடித்துக்கொண்டு போனார்களோ? விசாரிக்க வேண்டும்.”

“இன்றே கண்டுபிடித்தால்தானே, நாளை நடைபெற விருக்கும் கொலையை நிறுத்தலாம்.”