பக்கம் எண் :

 97

சேரன் சொன்னதும் ஹனிமேனின் மனம் நடுங்கியது. நாளைய கொலையைத் தடுக்க வேண்டும். முதலில் சேரனின் நாயைக் கண்டுபிடிக்க வேண்டும்.

“சேரா, பேருந்து நிலையத்தில் உன்னைக் கடத்திய ஒருவன், நாயை எட்டி உதைத்தான். அப்புறம் நாயை நீ பார்க்கவில்லை, இல்லையா?”

‘அப்புறம் சில நிமிடம் பார்த்தேன். நாய் ஆட்டோவுக்குப் பின்னே ஓடிவந்தது. ஆட்டோ பேருந்து நிலையத்திலிருந்து சாலைக்கு வந்த பிறகும் ஆட்டோவைப் பின் தொடர்ந்து ஓடி வந்தது” என்ற சேரன், அந்தக் காட்சியை மனத்திலே நினைத்துப் பார்த்தான். அந்தக் காட்சியை நினைத்ததும் திடீரென்று அவன் முகம் ஒளிர்ந்தது.

“சார், அப்போ ஆட்டோ போன திசைக்கு எதிரே, நாயைப் பிடிக்கும் வேன் போனதைப் பார்த்தேன் சார். டாலரை அவர்கள் பிடித்து விடுவார்களோ என்று பயந்தேன் சார். இது வரைக்கும் அதை மறந்துட்டேன். நாயைப் பிடித்து வைக்கிற இடத்துக்குப் போனால் உடனே டாலர் கிடைக்கும் ஸார்.”

சேரன் சாப்பிடுவதை விட்டு எழுந்து நின்றான்.

ஹனிமேன் அவனை அழைத்துக் கொண்டு காரிலே புறப்பட்டான்.

அவர்கள் புறப்பட்ட அதே நேரத்தில், பேருந்து நிலையத்தில் சேரன் நாயைப் பற்றி விசாரித்த ஜாக்கி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அழகான ஒரு நாயை நாய் வண்டிக்காரர்கள் பிடித்துக் கொண்டு போனதை அறிந்து, பிடிக்கப்பட்ட நாய்களை வைத்திருக்கும் இடத்தின் வாயிலை அடைந்துவிட்டான். ஆம்; ஜாக்கி, சேரனை முந்திக் கொண்டான்.