9 பிரிந்தவர் கூடினர் ! காரை ஓட்டிக் கொண்டிருந்த ஹனிமேன் அடிக்கடி சேரனைப் பார்த்துக் கொண்டே இருந்தான். ஒரு சிறுவனின் நாட்டுப் பற்றும் வீரச் செயல்களும் அவனை இன்னும் வியக்கச் செய்துகொண்டிருந்தன. “கவிஞர்கள் பிறக்கிறார்கள் ! உண்டாக்கப்படுவதில்லை என்பது போலத்தேச பக்தர்கள் பிறக்கிறார்கள், உண்டாக்கப்படுவதில்லை ! சுயநலம் கலவாத துணிவு மிக்க வீரர்களும் பிறக்கிறார்கள், உண்டாக்கப்படுவதில்லை !” ஹனிமேன் சிந்தித்தவாறே மீண்டும் தனது பார்வையைத் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த சேரனின் முகத்தில் படியச் செய்தான் ! சேரனின் முகத்தில் ஒரு மாறுதல் ! பதற்றம் படர்ந்த முகத்தின் உணர்ச்சி மாறிவிட்டது! இப்போது அந்தச் சின்ன முகத்தில் விவரிக்க முடியாத வேதனை விரிந்து வேரூன்றியது. “சேரா! திடீரென்று உன் முகத்தில் வேதனையைப் பார்க்கிறேன். என்ன விஷயம்? உன் வீட்டு ஞாபகமா? இல்லை ஏதோ அரசியல் சூழ்ச்சியிலே சிக்கி விட்டோமே என்கிற வேதனையா?” ஹனிமேன் கேட்டான். என்றாலும் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். சேரன் ஹனிமேனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பேசினான். |