பக்கம் எண் :

110ஏழைகள்

கும்! குறி சொல்லுகிறவர்கள் வந்து விட்டால், அவர்களிடம் முதலில் தங்கள் வாக்குமூலத்தைச் சொல்லி அதையே அவர்கள் திருவாக்கால் கேட்டுப் பணம் கொடுப்பார்கள், மாரியாத்தாளை உத்தரவு கேட்க! மாரியாத்தாள் தலையில் பூவைச் சுருட்டி வைத்து, அதன்மேல் ஒர் எலுமிச்சம்பழத்தை வைப்பார்கள்.

அழுத்தி வைத்த பூவானது விரிந்து எலுமிச்சம்பழம் கீழே விழுந்தால், அம்மன் உத்தரவு கொடுத்ததாக எண்ணித் திருப்பதிக்குப் பிரயாணம் வைப்பார்கள். பூவாடைக்காரி, கனவில் பிரத்தியக்ஷம்! இருட்டில் பேய்கள், முனீஸ்வரர்கள் எங்கள் பெண்கள் கண்ணுக்கு மாத்திரம் தெரியும்படி நாய் போலவும் பன்றி போலவும் ஓடுவதுண்டு. ஒருவர் சாகுமுன் செத்துப் போவதற்கான அறிகுறிகள் எங்கள் பெண்களுக்குத் தெரியும். இதை அவர்கள், சாக வேண்டியவர்கள், செத்துப்போன பின்புதான் சொல்லுவார்கள்!

சிங்கப்பூரில் இருக்கும் நாயகனுக்கு, நடுவீட்டுப் படத்திலுள்ள சுப்பிரமணியரைப் பக்கத் துணையாயிருக்கும்படி கட்டளையிடுவார்கள். உடனே அந்தச் சுப்பிரமணியர், தமது சொந்தச்செலவில் கப்பலேறிப்போய், இந்தப் பெண்ணின் நாயகனுக்குப் பக்கத் துணையாய் உட்கார்ந்து கொள்ளுவார்!

நாயகன் வருவதையோ, விருந்தாளி வருவதையோ, எங்கள் பெண்களிடம் முன்னதாகவே, காக்கையும், பல்லியும் சொல்லிவிடும். வரவேண்டியவர்கள் வந்தபின், பெண்கள், தங்களிடம் காகமும் பல்லியும் சொன்னதாகச் சொல்லுவார்கள்.

பிள்ளைகளை வளர்ப்பதிலோ, தம்மைக் காத்துக்கொள்வதிலோ சொந்த முயற்சியும் சொந்த அறிவும் பயனில்லை யென்று கருதிக் கடவுள் தலையில் பாரத்தைப் போட்டுவிடுவார்கள்.