புதுப்பெண்கள் போல் ஒரு சாயலாக மயில்கள் ஒதுங்கி ஒதுங்கி நடந்தன. இவை செல்வியின் மனத்தைக் கவர்ந்தன. கவிதைக்குரிய அழகின் கூட்டத்தை அவளால் வருணிக்க முடியவில்லை. அவள் பேசுவாள். ஆயினும் ஊமையானாள். செக்கச் செவேலென்று பூத்திருந்த செங்காந்தள் மலர்களையும், அவைகளை அடுத்து உயரத்தில் தொங்கும் பொன்னிறமான சரக்கொன்றை மலர்களையும் தோழிகள் கண்டார்கள். அக்காட்சி, ‘இரப்பவர் இல்லை என்று ஏந்திய கைகளில் கொடையாளிகள் பொற்காசுகளைச் சொரிவதாகும்’ என்று கவிதை செய்து கொண்டிருந்தார்கள். அச்சமயம் புள்ளிமான் ஒன்று வேறொரு பக்கத்தில் செல்வியை அழைத்துக்கொண்டு போயிற்று. சூரியன் அஸ்தகிரியைத் தழுவும் நேரம் ஒரு பக்கம். ஒரு பக்கம் பிரிந்து சென்ற செல்வி, சிறிது ஆயாசத்தால் அங்கிருந்த பளிங்குமேடை ஒன்றில் அமர்ந்தாள். அவளுடைய நீலவிழிகள் சஞ்சரித்த இடத்தில் காதல் விளைக்கும் ஆண்மயிலும் பெண்மயிலும் ஒன்றை ஒன்று கண்ணாற் சுவைத்தபடி இருந்தன. அந்தக் காதல் வெள்ளம் இரண்டிற்கும் நடுவில் ஒரு விரற்கடைத்தூரந்தான் பாக்கி. செல்வி தன் பார்வையைத் திடீரென்று மறுபடியும் திருப்பினாள். அவளுடைய ‘தன்னந்தனிமை’யை அவளுக்கு ஞாபகத்தை உண்டாக்கின. சோடி மயில்கள் அவளுடைய இளமையின் இயற்கை அவளைக் கண்ணீர்விட வைத்தது. அவள் எழுந்தாள். தோழிமாரைத் தேடி நடந்தாள். மற்றொருபுறம் செங்குன்றூர் இளவரசன் மெருகேற்றிய கருங்கல் மேடை ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆயி |