போர்த்தொழிலையும் மறந்து! அவர்கள் தம் தலைவர்களின் வெற்றி தோல்வியை எதிர்பார்ப்பதையும் மறந்து போனார்கள். போர்த்திறமை வெகுநேரம் நீடிப்பதால் கலைநுட்பம் தமக்குப் புரியும் என்று நினைத்தார்கள். முடிவில், வாட்போர் செய்திருந்த அந்த இரு தலைவர்களின் இரு மார்பிலும், ஏக காலத்தில், இரண்டு வாள்முனைகள் நுழைந்து வெளிவந்தன. அதனால் இருவர் தோள்களும் தாழ்ந்தன. இரு மார்புகள் ரத்தத்தை உகுத்தன. கடை சாய்ந்து விழும் இரு தேர்கள்போல் இருதலைவரும் ஒரு முகமாகச் சாய்ந்தனர். இருவர் உடைகளும் இடம்விட்டு நகர்ந்தன. இருவர் கண்களும் சந்தித்தன. கழுத்தளவு கத்தரித்து விட்ட சிகை. மேலேறிய சூரிய ஒளி பொருந்திய புருவம் சமீபத்தில் முல்லைப்பல் கருநாகம் போன்ற பின்னல்! ‘என் அன்பே’ என்று பதைத்தது வீரன் உடல்! என் அன்பே என்று அதிர்ந்தது, செல்வியின் மலர்மேனி! இருவர் தோள்களும் தழுவின காதற் பதைப்பால்! போகும் உயிர்கள் பிடித்து நிறுத்தப்பட்டன சிறிது நேரம்! ரத்தஞ் சிந்திய யுத்த பூமியில் அந்த மலர் மஞ்சத்திலே ஒரே நேரத்தில்-ஒரே கணத்தில் இரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. அவை ஒரே ஒரு காதல் முத்தம், இரண்டு மரணம்! |