பஸ் அடுத்த ஊரில் ஓர் விறகுக் கடையண்டை நிற்கும்படி சங்கரன் சொன்னான். அது விறகுக்கடை என்பது சங்கரனுக்கு நன்றாய்த் தெரியும். விறகுக்கடையில் மனிதர்கள் நின்றார்கள். சங்கரன் கடைக் காரனைப் பார்த்துக் காப்பி இருக்கிறதா என்று கேட்டுவிட்டு, என் தாயார், எனக்குப் பொத்தற் செம்பில் பால் கொண்டுவந்து வைத்தார்கள். அந்த அநியாயக்காரி அப்படிச் செய்ய நினைத்தால் அந்த ஆபத்திலிருந்து எப்படி நான் தப்பமுடியும்! தாயை நம்ப வேண்டுமா! நம்ப வேண்டாமா? பலகாரமும் சாப்பிடவில்லை, பாலை நம்பி. செம்பில் பால் துளி கூட இல்லை என்று சொன்னான். அங்கிருந்த அனைவரும் சங்கரன் தாயைக் கொடுங்கண்ணால் ஒருமுறை பார்த்து விட்டு, இந்தப் புண்ணியவதிதான் உமது தாயோ என்று கேட்டார்கள். தாய்க்கு இதயம் பிளந்துவிடும் சமயம் பஸ் புறப்பட்டது. சங்கரன் தாய் சொன்னாள் : நான் வேண்டுமென்று செய்யவில்லை அப்பா. அந்த வார்த்தையை அவள், அடிமை ஒருவன் ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்கும் முறையில் சொன்னாள். சங்கரனும், அம்மா அதனால் இப்பொழுது என்ன முழுகிப் போய்விட்டது என்று வெகு வினயமாகப் பதில் கூறினான். பஸ்ஸில் எண்ணெய் ஆகிவிட்டதால் அடுத்த நகரின் ஷெட்டில் இருந்த கடையில் பஸ்ஸை நிறுத்தினான் டிரைவர். சங்கரன் அங்கிருந்த கூட்டத்தை நோக்கி, இங்கே காப்பி அகப்படுமா என்று கேட்டான். சங்கரன் எதிர்பார்த்தபடியே கிடைக்காது... என்று பதில் கிடைத்தது. இதோ இந்தம்மா தான் என் தாயார். காலையில் என்னைப் பட்டினி போட்டுவிட்டார்கள் என்று தொடங்கி வெகு உருக்கமாக முடித்தான். தன் தாய் ஓர் அன்பற்ற மிருகம் என்ற இந்தப் பிரசாரத்தின்பின் பஸ் புறப்பட்டது. |