பக்கம் எண் :

126ஏழைகள்

அங்கொரு கடையில் பலர் கூடி இருந்தார்கள். என் தாயார் செய்கையைக் கூறினேன். எவராவது அவள் செய்தது சரி என்று ஒத்துக் கொண்டார்களா?அந்த நகர மக்களில் யாராவது இவளைத் தூற்றாமல் இருந்தார்களா?சத்திரத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் சொல்லிக் காட்டினேனே அவர்களில் இவளை எவன்தான் காறி உமிழவில்லை? உங்களில் யாருக்குத்தான் பிடிக்கிறது, இவள் செய்கை? என் மீது உங்களுக்கெல்லாம் இத்தனை இரக்கம் ஏன் உண்டாகிறது.

என்று கூறி முடித்தான். இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர், ‘அந்தம்மாவின் வாக்கு மூலம் என்ன?’ என்று கேட்டார்கள்.

தாய் :

பொத்தற் செம்பிலே பால் வைத்ததாகச் சொல்லுகிறான் பிள்ளை.

  

சிலர் :

உங்கள் பிள்ளைதானே?

  

தாய் :

ஏன் கேட்கறீர்கள்!

  

சிலர் :

பின் என்ன?பெற்ற தாயாயிருந்தால் இந்தப்பிள்ளை சொந்தத் தாயைப்பற்றி இவ்வளவு பேர் அறிய- இத்தனை ஊர் அறிய உங்கள் மீது பழிகூறித் திரிவாரோ?

  

தாய் :

நான் பெற்றால் என்ன, பெறாவிட்டால் என்ன, அவன் என் பிள்ளைதான்.

  

சிலர் :

உம் வயிற்றில் பிறந்த பிள்ளையா?

  

தாய் :

இது என்ன கேள்வி?

  

சங்கரன் :

இவள் என்னைப் பெற்றவளாயிருந்தால் இப்படிச் செய்வாளா? என் மாற்றாந்தாய் அவள்.