பக்கம் எண் :

136ஏழைகள்

காக்கை-ஆம் அரசே, அங்கு மிகுதியாகச் சோறு கறி கண்டேன். என் இனத்தை யெல்லாம் அழைத்தேன். அனைவரும் உண்டோம்.

யானை-உங்கள் சோறும் உங்கள் கறியுமா?

காக்கை-இல்லை, இல்லை. திருமண வீட்டார் எறிந்தவை.

முகிலி என்னும் அரச யானை தன் தீர்ப்பைச் சொல்லுகிறது :

காக்கையாரே, நீரும் உம் இனமும் அறவோர் என்கின்றீர். இருக்கலாம். ஆயினும், நீர் ஒரு பிள்ளை ஏமாந்தபோது அப்பத்தைப் பிடுங்கியதாகக் கூறினீர். சிட்டுக் குஞ்சுகளைத் தின்றதாகக் கூறினீர். ஊரார் வீட்டுச் சோறுகறிக்கு உறவினரை அழைத்ததாகக் கூறினீர். இதனால் தெரிவதென்ன எனில்,

நீங்கள் ஏமாந்தவர்கள் தொடையில் கயிறு திரிப்பவராகவும் எளியோரை வஞ்சிப்பவராகவும், ஊர்ச்சொத்தை உண்ண ஒற்றுமையாய்க் காலையில் எழுந்து வருபவராகவும், இருக்கின்றீர். உம் இனமும் இவ்வாறு அறவோர் என்னும் மறவோர் ஆதலில் தமிழ்ப்புலவர் சாற்றியது தக்கதே. உம் வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.