மனைவிக்கும் ஒரு மகிழ்ச்சி; என்னவென்றால் ஐந்து பிள்ளைகளும் பசியால் விம்மியது சேர்ந்ததால் குப்புறப்படுத்துத் தூங்கிவிட்டார்கள். புலவர், தம் ஒட்டிய வயிற்றை மேலும் ஒரு கையால் அழுத்தியபடி குடியிருக்கும் பகுதியில் ஒருபுறம் கிடந்த முறத்தைத் தூக்கிக் கூரைமேல் செருகிவிட்டு அந்த இடத்தில் சோர்ந்து உட்கார்ந்தார்! எதிரில் பெருத்த வயிற்றோடு அவர் மனைவி நின்று கொண்டிருந்தாள்; பெருத்த வயிறென்பது உணவுண்டதால் பெருத்ததன்று. அந்த அம்மாவின் வயிற்றில் ஆறாவது குழந்தை வாழ்கின்றது. “பெருங்காற்று! விடிந்தால் அமைதி”-என்றார் புலவர். “காலையில் சம்பளம் வருவது உறுதிதானே”-என்றாள் மனைவி. புலவர் சொல்லுகிறார்; அதிகாலையில் கழகத்தலைவரும், பொருட்காப்பாளரும் வெளியில் போகுமுன் அவர்களை வளைத்துக் கொள்கிறேன். சம்பளத்தை வாங்கிக்கொண்டு நேரே வீட்டுக்கு வருகிறேன். உன்னிடம் நாலைந்து ரூபாயைப் போட்டுவிட்டு நேரே கடைக்குப் போய்விடுகிறேன்! நீ காலையில் விறகு முதலியவைகளை விரைவாக வாங்கிவிடு. நான் கடையில் ஆகவேண்டியதை முடித்துக்கொண்டு ஒடி வந்து விடுகிறேன். அரிசி முதலியவைகளை நாம் சில்லரையாக அவ்வப்போது வாங்குவது சரியல்ல. ஒரு மூட்டை அரிசி ஒரு மாதத்திற்கு வேண்டிய பலசரக்கு வாங்கிவந்து விடுகிறேன். நான் கடைத்தெருவில் சிற்றுணவு பார்த்துக் கொள்கிறேன். காலையுணவைச் சிறிது நல்ல முறையில் ஏற்பாடு செய். பிள்ளைகட்கு! மனைவி; | ஆமாம்! இராப்பட்டினி கிடந்த பிள்ளைகள். இப்போதே ஒரு மாட்டுவண்டி பேசி வைத்துவிடலாமே, அரிசி முதலியவற்றை ஏற்றிவர! |
|