5 என்னப்பன் கூத்தாண்டவன் அருட்பெருக்கு!
28-4-1931 இல், என்னப்பன் கூத்தாண்டவன் விழா, புதுவைப் பிள்ளையார் குப்பத்தில் இனிது நடைபெற்றது. அக்கிராமத்திலிருந்த சாராயக்கடையிலும், கள்ளுக்கடையிலும் சரக்குத்தான் பஞ்சம்! தொண்டர் கூட்டம் மிகமிகப் பெரிது! நான் விழாவுக்குச் சென்றேன். விழாவை நான் பார்த்தேன். என் அப்பனை நான் தெரிசித்தேன்; அயர்ந்தேன். ஆச்சரியம்! மூக்கின்மேல் கையை வைத்துக்கொண்டேன். ஊன்றி யோசிப்பதற்காக. நான் என் மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டேன். இந்த உலகத்தை நடத்திவரும் ஆஸ்திகர்கள். எவ்வளவு புத்திமான்கள்! எவ்வளவு விஷயந் தெரிந்தவர்கள்! அடடா! அவர்கள் இந்த உலகத்தை, இன்னும் எத்தகைய உன்னதநிலைக்குக் கொண்டுவர வேண்டியதிருக்கிறது! |