பக்கம் எண் :

32ஏழைகள்

நான் மூக்கின்மேல் விரலை வைத்துக்கொண்டேன். மிக்க யோசனையில் ஆழ்ந்துவிட்டேன். இன்றைய உலகை ஆண்டுவரும் ஆஸ்திகர், எத்தனை உயர் நோக்கமுடையவர்கள்! அவர்களின் யோக்கியதை என்ன! அவர்களின் புதிய புதிய எண்ணங்கள் அடடா! இப்படிப்பட்ட ஆஸ்திக மனிதர்களின் உலகத்தில்-இந்தப் பிள்ளையார்குப்பத்தில் கூத்தாண்டவர் விழா நடவாவிட்டால், இந்த உலகத்திற்கு என்ன துன்பம் வந்துவிடுமோ நமக்கென்ன தெரியும்! அது ஆஸ்திக அன்பர்கட்குத்தானே தெரியும்!

நான் மூக்கின்மேல் விரலை வைத்துக்கொண்டேன். யோசனை, அதிக யோசனை! ஆஸ்திகர்கள் பிள்ளையார்குப்பத்தில் கூத்தாண்டவர் விழாவை ஏற்படுத்தினார்களே, அதனோடு அவர்கள் நில்லாமல், கூத்தாண்டவன் தொண்டர்களை ஏன் ஏற்பாடு செய்தார்கள்? அப்படித்தான் அவர்கள் தொண்டர்களை ஏற்பாடு செய்தார்கள். அவர்களுக்கு ஆண்தன்மை இல்லாமல் இருக்க வேண்டுமென்று ஏன் நிபந்தனை ஏற்படுத்தினார்கள்? ஆடவர் அனைவரும் பெண்போல் நடந்தும், பெண்கள்போல் உடுத்தியும், பெண்களைப்போல் ஒப்பனை வைத்து அழச்சொல்லியும், அழுகை வராவிட்டால் பட்டைச்சாராயத்தையாவது குடித்துவிட்டு அழச்செய்தும், ஆண் தன்மையுடையவர்களை நாளாவட்டத்தில் பேடியாகச் சொல்லியும், ஏற்கனவே பேடியாயிருப்பவரை இளைஞர்க்குத் தொல்லை தரச் செய்தும் இப்படியெல்லாம் ஏற்பாடு செய்து வைத்த ஆஸ்திகரின் கருத்து என்ன? என்னால் அறியக் கூடவில்லை. அறிவற்ற மூடர்களே என்றால் கோபித்துக்கொள்ளும் சில ஆஸ்திக சிகாமணிகட்கு, இதன் காரணம் தெரியாமற் போகுமா?

சென்ற தடவையைப் பார்க்கிலும் இந்த ஆண்டில் கூத்தாண்டவர் வேஷம் போட்டு, அதாவது பெண் வேஷம் போட்ட தொண்டர்கள் அதிகம் என்று சொல்ல வேண்டும், மிக்க அதிகம் என்று சொல்ல வேண்டும். ஏழைகட்கு வேலை அகப்படாமல் போவது கூத்தாண்டவனது அருள் போலும்.