பக்கம் எண் :

36ஏழைகள்

குதித்தவன் எழுந்திருக்க முடியவில்லை. உட்கார முடிந்தாலும் பாதகமில்லை. புளித்த கள் ஆளைப் படுக்க வைத்து விட்டது. எடுத்து வந்தவன் அடடா என்று ஓடி வந்து சல்லிய மகாராஜனிடம் அந்தக் கூழில் அந்த மோரை ஊற்றி இந்தா என்றான். சல்லிய மகாராஜா எழுந்தார். தம் மிடம் கொடுத்த கூழ்-மோர் இவைகளைப் பார்த்தார். கையை விட்டுக் கரைத்தார்.

இதற்குள் வேடிக்கை பார்க்க வந்தவர்களில் ஒருவன் எழுந்து, ‘என்னாங்காணும் கூத்தாடிகளே! சல்லியராஜன் தேரை விட்டுக் கீழே குதித்தவுடன் இவ்வளவு நேரம் என்ன செய்தார்’ என்று கேட்டான்.

அதற்கு, குடி மயக்கத்திலிருந்த மொட்டை முருகனாகிய சல்லிய ராஜன் உடனே எழுந்து,

‘தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன், மோரை விட்டுக் கூழைக் கரைத்தான்’ என்று பாடினான்

சல்லிய ராஜன் கௌரவம் வெகு நன்றாயிருக்கிறது. குடி வெறியில் அவர் மோரை விட்டுக் கூழைக் கரைக்கிறார் என்று ஜனங்கள் சொல்லி நகைத்தார்கள்.

அதுபோல, நமது கனம் சி. பி. ராமசாமி ஐயர் வைசிராய் நிர்வாக சபை மெம்பர் ஸ்தானமென்னும் தேரிலிருந்து சென்னைக்குக் குதிக்கிறார். அவர் வருணாச்சிரம மயக்க முடையவர். மோரை விட்டுக் கூழைக் கரைக்கப் போகிறார். அறிவுள்ள ஜனங்கள் வேடிக்கை பார்த்து வருவார்கள்.

கனம் சி. பி ராமசாமி சென்னைக்கு வருவதையும், பார்ப்பனப் பசங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதையும், சூழ்ச்சி செய்ய எண்ணமிடுவதையும், இதற்காக ஐயரை வானளாவப் புகழப் போவதையும், காணுகின்ற ஜனங்கள் ஐயர் சல்லிய மகாராசாவாக இருந்தாலும் நமது ஐயர் ஐயர்தான் என்ற உணர்ச்சியை இழக்கக் கூடாது. பார்ப்பனரல்லாதவர்கள் மலைக்க வேண்டாம். அந்தக் காலம் மலையேறிவிட்டது.