பக்கம் எண் :

38ஏழைகள்

7
ஆற்றங்கரை ஆவேசம்


தை மாதப் பொங்கலை யடுத்து வரும் கரிநாளன்று, கிராமங்களில் கன்னிப் பொங்கல் நடத்துவதுண்டு. இதற்கு ஐந்தாறு நாட்களின் முந்தியே, சிறு பெண்கட்கு இதுபற்றி நினைவு வந்துவிடும். இதைப் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். பருவமடையாத ஏழு சிறுமிகளை அன்றைக் காலை முதல், விரதம் அனுஷ்டிக்கும்படி ஏற்பாடு செய்திருப்பார்கள். மாலையில் ஆற்றுக்குக் கூட்டிப் போவார்கள். ஊர்ச்சிறுமிகள் அனைவரும், உடன் போவார்கள். பொங்கலிட்டுப் படையல் போட்டுக் கற்பூரம் கொளுத்தும் போது, பெரிய மனுஷிகள் அனைவரும், அந்த ஏழு கன்னிமார்களில் ஒருவர் மேலாவது ஆவேசம் வராதா என்று எதிர் பார்ப்பார்கள். இதற்காக அவர்கள், அந்த ஏழு பேர்களையும் கும்பலாக உட்கார வைத்து, எதிரே சாம்பிராணியை அபரிமிதமாகப் புகையச் செய்வதுண்டு. ஆவேசம் வராவிட்டால், பெரிய மனுஷிகள் மனம் அமைதி பெறுவதில்லை, சிறுமிகள் மேல் ஆவேசம் வரும்படி செய்யும் பிரயத்தனத் தால், அந்தச் சிறுமிகள் மிக்க கஷ்டம் அடைய வேண்டி வரும். அவர்கள் மூர்ச்சித்து விழுவதும் உண்டு!