பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்39

கன்னிப் பொங்கல் விஷயமாக எங்களூர்ப் பெரிய மனுஷிகள் பேசிக்கொள்ளும்போது, முற்காலத்திலெல்லாம் கன்னிப் பொங்கலிடும்போது, பெண்கள்மீது ஆவேசம் வரும். கிராமத்திலிருப்பவர்களின் கேள்விக்கெல்லாம், தக்க சமாதானம் சொல்லும். உள்ளது உள்ளபடி சொல்லும். வர வரக் கலிகாலமாய்ப் போய்விட்டது. வருகிற சாமியும் வர மாட்டேன் என்கிறது! என்று சொல்லிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன்.

சென்ற வருஷம் தைமாதம் முதல் தேதிக்கு முன்பே, தெருச் சிறுமிகட்குக் கன்னிப் பொங்கல் பேச்சு அதிகமாய் இருந்தது. அங்கொரு பாழடைந்த பிள்ளையார் கோயில் உண்டு. அதில் அந்தச் சிறுமிகள் கூடி, நடைபெற இருக்கும் கன்னிப் பொங்கல் விஷயமாக என்ன முடிவு கட்டினார்களோ தெரியவில்லை. வழக்கப்படி கன்னிப் பொங்கல், ஆற்றங்கரையில் நடந்தது. ஆவேசம் வரவழைக்க முயற்சி நடந்தது.

சிரமமில்லாமல் ஏழு கன்னிகள்மீதும், ஆவேசம் கிளம்பிற்று. பெரிய மனுஷிகள் கும்பலாய்ச் சூழ்ந்துகொண்டு, சாமியை உத்தரவு கேட்க ஆரம்பித்தார்கள். நானும் இன்னும் சில வாலிபர்களும், எட்டியிருந்து வேடிக்கை பார்த்திருந்தோம்.

ஆவேசங் கொண்ட பொன்னம்மா என்னும் சிறுமியை நோக்கிக் கிழவி ஒருத்தி, ‘ஓ! பொன்னம்மா’ என்று கூப்பிட்டாள். அந்தப் பொன்னம்மாச் சாமியானது. ‘அதெல்லாம் கூடாது! வீட்டில் அழைப்பது போல என்னைப் பேர் சொல்லக் கூடாது! ’ என்றது.

கிழவி :

கன்னியம்மா, பொங்கலிட்டதில் திருப்திதானா?

  

பொன்னம்மா :

ஏண்டி நீ, வெல்லம் போட்ட அரிசியில் பாதியை வீட்டில் வைத்துவிட்டாய்?

(இதற்குள்)

  

ஆவேசங் கொண்ட மொட்டை :

அதெல்லாம் சரிப்படாது, அதை எடுத்துவா என்று சொன்னாள்.