பக்கம் எண் :

  

அணிந்துரை


பாடல் படைப்பில் மட்டுமல்லாமல், சிறுகதை ஆக்கத்தாலும் ஒரு மதிக்கத்தக்க வேந்தராகப் பாரதிதாசன் விளங்குகிறார் என்பதற்கு ‘ஏழைகள் சிரிக்கிறார்கள்’ என்ற இந்நூல் சான்றாகிறது.

1930-32ஆம் ஆண்டுகளுக்கிடையில் வெளிவந்த ‘புதுவை முரசு’ இதழ்களிலும், பின்னர் நடத்தப்பட்ட 'குயில்' இதழ்களிலும் மாசிலாமணி (முதலியார்) நடத்திய ‘தமிழரசு’ இதழ்களிலும், பி. எஸ். செட்டியார் நடத்திய ‘சினிமா உலகம்’ இதழ்களிலும், காஞ்சி மணி மொழியார் நடத்திய ‘போர்வாள்’ இதழ்களிலும் இடம் பெற்ற பாரதிதாசனின் கதைகள் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன.

சுயமரியாதைத் தந்தை பெரியார் ஈ. வெ. ரா. அவர்களின் ‘புரட்சி’ இதழில் முதன்முதல் வெளிவந்த ‘ஏழைகள் சிரிக்கிறார்கள்’ என்ற கதையின் தலைப்பே இத்தொகுப்பு நூலுக்குப் பெயராக வைக்கப்பட்டுள்ளது. துன்ப துயரங்களைச் சுமக்கின்ற அவலம் குறைவதற்காக ஏழைகள் சிரிக் கிறார்கள். ஆயினும், அவர்கள் உணர்வும் அறிவும் பெற்றெழுந்துவிட்டால் ஆதிக்கமேடுகளின் எலும்புகள் எண்ணப்பட்டு விடுவதோடு, அவை தகர்க்கவும் பட்டுவிடும் என்ற அருகதையைத் தெரிவிப்பவை இக்கதைகள் ஆகும்.

பாரதிதாசனின் படைப்புத்துறைகள் பரந்துபட்டவை; அவற்றுள் உரைநடை சார்ந்த கதைப்படைப்புகள் தனித்து எடுத்து ஆராயத்தக்க தகுதிபடைத்தவை என்பதை இந்நூல் தெளிவு படுத்துகிறது.