இத்தனை நாள் கடவுள்-சாமி-தெய்வம் என்ற பெயர் மயக்கத்தால் அப்பெயர்களையுடைய மனிதன்-பொருள்-செயல்-இவைகளின் உட்புறத்தை அலசிப்பார்க்க இந்திய மக்கள் கருதவில்லை. பகுத்தறிவு செத்துப்போனதற்குக் கடவுள் கொள்கை காரணம் என்க. பூமியைப் பூமாதேவி யென்றும், ஆகாயத்தை ஆகாய வாணியென்றும், ஜலத்தை வருணபகவான் என்றும், நெருப்பை அக்கினி பகவான் என்றும், காற்றை வாயு பகவான் என்றும் கொண்டாடும் இந்திய மக்கள் அப்பஞ்ச பூதங்களின் தத்துவத்தை உட்புகுந்து ஆராய, அவர்கள் கருத்தைச் செலுத்த முயன்றதேயில்லை. பஞ்சபூதங்களுக்குத் தொண்டர் ஆனார்கள். ஆனால் பகுத்துப் பகுத்துப் பொருளின் உண்மையறியும் கூட்டத்தினருக்கு அப்பஞ்ச பூதங்கள் வேலை செய்யும் விதத்தைக் காண்கிறோம். தந்தித் தபால், புகைவண்டி, ஆகாய விமானம், தூர தரிசனம், போலி மனிதன், இமயமலை ஆராய்ச்சி செயற்கை மழை, செயற்கை வெய்யில் ஆகிய இன்றைய அபூர்வ- வாழ்க்கை விநோதங்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் உள்ளும் புறமும் ஆராய்ந்து அவைகளை அடிமையாக்கியவர் களால் ஏற்பட்டவை. திருடன் தான் திருடிய பணம் வைக்கும் பெட்டிக்குப் பெத்த பெருமாள் என்று பெயர் இருந்தால் பகுத்தறிவுள்ளவன் பெத்தபெருமாளின் தலையைத் திருக வேண்டியது ஞாயம். ஊரிற் கொள்ளை போன பொருள்கள் உடையவர்களிடம் கணக்குப் பார்த்து ஒப்புவிக்கப்பட்டது. |