பயிரிட்டு ஜீவனம் செய்வதற்கு முதலாளியிடம் இன்னும் என்ன வசதி கேட்டுப் பெற வேண்டும் என்று யோசிக்கையில் எல்லா வசதியும் தனக்கு முதலாளி ஏற்பாடு செய்து விட்டார் என்றே தோன்றிற்று. தேனூருக்குக் குடியேறினான். முதலாளிக்குத் தேனூர்க் கிராமத்திலுள்ள அரைவேலி நிலத்தைப் பற்றிய கவலை தீர்ந்தது. மற்றும் பல இடங்களிலும் இவ்வாறு துண்டு துண்டாய்க் கிடந்த நிலங்களை யெல்லாம் இந்தக் காரியக்காரனுக்கு ஒப்படைத்ததுபோலவே ஒவ்வொருவருக்கும் ஒப்படைத்து விட்டான். இவ்விஷயமான கவலை நெஞ்சில் இல்லை இனி இதுபற்றிய கவலைகள் தன்னை அண்டவும் அவன் இடம் கொடுக்கப் போவதில்லை. இது முதலாளியின் தீர்மானம். தேனூர் சென்ற காரியக்காரன் தான் அவ்வூரிலிருந்து இரண்டு நாளைக்குப்பின் தன் முதலாளிக்கு ஓர் கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தில்-தனக்கு முதலாளி செய்த உதவியைப் பாராட்டியும், அதற்காக நன்றி செலுத்துவதாகவும் எழுதியிருந்தான். தனக்காக ஏற்பட்ட வீட்டில் நிரம்பக் குப்பைகள் இருந்ததாகவும் மாடுகளுக்குத் தீனி இல்லையென்றும் எழுதியிருந்தான். இதனோடு தனக்கு உழுகின்ற ஆட்கள் தேவை யென்றும் அதற்காக அங்கிருந்து ஆட்களைக் கடிதம் மூலம் நியமித்துத் தரும்படி கேட்டிருந்தான். தேனூர்க் கிராமத்தில் கள்ளர் இருப்பதாகவும் அவர்களால் ஏற்படும் தீமையிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அதில் குறித்திருந்தான். இந்தக் கடிதத்தை அவன் தன் முதலாளியின் விலாசம் இட்டு ஓரணாத் தலையும் ஒட்டிப் போட்டான். அதற்குப் பதிலை எதிர்பார்த்தான். ஆனால் தன் வேலையைத் தொடங்கவில்லை. உயிர் வாழ்வதற்காகப் பணத்தைச் செலவிட்டுச் சாப்பிட்டு வந்தான். |