11 வேல் பாய்ந்த இருதயம்
ரத்தினமுத்து 25 வயதுள்ள பெண் இளம் விதவை வீட்டில் அவள் குறுக்கில் நெடுக்கில் உலவ முடியாது. அபசகுனமாம். திருக்குடும்பத்தின் படம் மாட்டாப்பட்டிருக்கும் கூடத்தின் பக்கம் அவள் காற்றே படலாகாது. அபசகுனமாம்! புதிதாக வாங்கி வந்த பண்டங்களில் அவள் விரல் வைக்கலாகாது. தோஷமாம். இரண்டு புதுப்புடவை வாங்கி வந்தபோது அதில் ரத்தினமுத்துக்கு வாங்கி வந்ததை அவள் முதலிலேயே எடுத்து உடுத்திய காரணத்தால் தாய்-அடி மூதேவியே என்று ஒருதரம் கேட்டதுண்டு. ரத்தினத்துக்கு ஞாயமாக ஒரு பெண்ணிடம் பெற்றோர் காட்ட வேண்டிய சலுகை தீர்ந்தது. அவள் கலக்கமற்றுப் பல பக்கத்திலும் வீட்டில் உலவமுடியாத பல வழிகளும் அடைக்கப்பட்டன. ஆகையால் ரத்தினமுத்து கூட்டில் அடைத்த கிளியானாள். மேல்மாடியில் ஓர் அறையில் எப்போதும் ஒதுங்கிக் கிடந்தாள். ஆனால் ரத்தினமுத்து இப்படித் தனித்திருப்பதும் அவளுக்குள்ள வருத்தத்தை அதிகப்படுத்தியது. |